ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் மோதல்; 7 பேர் கைது
ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் மோதல்; 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரிமளம் ஒன்றியம் நெடுங்குடி ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. தேர்தல் நடைபெற்று கொண்டிருந்த பொழுது ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ராஜமாணிக்கம் ஆதரவாளர்கள் இரண்டு பேர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மற்றொரு வேட்பாளரான வெள்ளைச்சாமி ஆதரவாளர்களிடம் தகராறு செய்து உள்ளனர். பின்னர் அது மோதலாக மாறியது. இதில் கணேசன் (வயது 40), விஜயகுமார் (42), கைலாச குமார் (20), சுப்பிரமணியன் (48), ராமு (60), தினேஷ் (24) ஆகியோர் காயமடைந்தனர். பின்னர் அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கே.புதுப்பட்டி போலீசார் செல்வரத்தினம் (37), படிக்காசு (21), காசிநாதன் (39), செல்வகுமார் (39), மதன்குமார் (22), பாண்டி (22), பிரசாந்த் (27) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய ராஜமாணிக்கம், ராசு, சுப்பிரமணியன், மாரிமுத்து, செல்வம் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.