வெயிலுக்கு கீற்று கொட்டகை அமைப்பது தொடர்பாக மோதல்: 3 பேர் கைது


வெயிலுக்கு கீற்று கொட்டகை அமைப்பது தொடர்பாக மோதல்: 3 பேர் கைது
x

கரூர் அருகே வெயிலுக்கு கீற்று கொட்டகை அமைப்பது தொடர்பாக இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர்

இருதரப்பினர் மோதல்

கரூர் அருகே உள்ள வாங்கல் பழையூர் மீனவர் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). இவர் தனது வீட்டின் பின்புறம் வெயிலுக்காக கீற்று கொட்டகை அமைத்து வந்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த ஜெயலட்சுமி (53) என்பவர் கீற்று கொட்டகை அமைப்பது தொடர்பாக கேட்டுள்ளார். இதனால் சரவணனுக்கும், ஜெயலட்சுமிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் சரவணன், அவரது மனைவி சாந்தி (47), உறவினர்கள் லட்சுமி, முருகவேல், 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரும் சேர்ந்து ஜெயலட்சுமி மற்றும் உறவினர் வர்ஷா (19) ஆகிய 2 பேரையும் மரக்கட்டைகள் மற்றும் அரிவாளால் தாக்கினர். இதில் காயம் அடைந்த 2 பேரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து ஜெயலட்சுமி மகள் பானுமதி வாங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

3 பேர் கைது

இதேபோல் சரவணன் தனது மனைவி சாந்தி (42), 17 வயது சிறுவன் ஆகியோரை ஜெயலட்சுமி, அவரது கணவர் சுப்பிரமணியன் (67), மகன் ராஜேந்திரன் (40), உறவினர் வர்ஷா ஆகியோர் சேர்ந்து மரக்கட்டையால் தாக்கியதாக வாங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.இந்த 2 புகார்கள் தொடர்பாக போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் தகராறு தொடர்பாக சரவணன், முருகவேல், சுப்பிரமணியன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story