ஜீப் மோதி 10-ம் வகுப்பு மாணவன் பலி


ஜீப் மோதி 10-ம் வகுப்பு மாணவன் பலி
x
தினத்தந்தி 27 Nov 2022 12:15 AM IST (Updated: 27 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

காரமடை அருகே மோட்டார் சைக்கிளில் டியூசன் சென்ற 10-ம் வகுப்பு மாணவன் ஜீப் மோதியதில் பலியானார்.

கோயம்புத்தூர்

காரமடை

காரமடை அருகே மோட்டார் சைக்கிளில் டியூசன் சென்ற 10-ம் வகுப்பு மாணவன் ஜீப் மோதியதில் பலியானார்.

மோட்டார் சைக்கிள்-ஜீப் மோதல்

கோவை மாவட்டம் காரமடை அருகே மருதூர் கெம்மனூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 36). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் நளின் குமார் (வயது 16). இவன் புஜங்கனூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் நளின் குமார் நேற்று காலை டியூசன் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தான். மருதூர் மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது, எதிரே தாயனூரில் இருந்து காரமடை நோக்கி வந்த ஜீப் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட நளின் குமார் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தான்.

மாணவன் பலி

மாணவனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் அங்கு சிகிச்சை பலனின்றி நளின்குமார் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜீப்பை ஓட்டி வந்த தாயனூர் ராம்நகரை சேர்ந்த மோகன்குமாரிடம் (36) விசாரணை நடத்தினர்.

டியூசன் சென்ற மாணவன் ஜீப் மோதி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story