பஸ் மோதி 6-ம் வகுப்பு மாணவன் பலி
பாவூர்சத்திரம் அருகே பஸ் மோதி 6-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
பாவூர்சத்திரம்:
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே அரியப்பபுரம் கணக்கநாடார்பட்டியைச் சேர்ந்தவர் ராஜசேகர். ஆட்டோ டிரைவர். இவருடைய மகன் சக்திவேல் (வயது 12), அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் நேற்று பள்ளிக்கூட விடுமுறையையொட்டி, பக்கத்து ஊரான எல்லைப்புள்ளி கிராமத்தில் உள்ள நண்பனை பார்ப்பதற்காக சைக்கிளில் புறப்பட்டு சென்றான்.
கடையம்- தென்காசி சாலையில் எல்லைப்புள்ளி விலக்கு அருகில் சென்றபோது, அம்பையில் இருந்து தென்காசிக்கு சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து தகவல் அறிந்ததும், பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக பஸ் டிரைவரான அம்பை அகஸ்தியர்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எல்லைப்புள்ளி விலக்கில் அடிக்கடி விபத்துகள் நிகழுவதால் அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பஸ் மோதி 6-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.