9-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்:தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனைஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


9-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்:தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனைஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x

9-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்:செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது

ஈரோடு

9-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

பாலியல் பலாத்காரம்

அம்மாபேட்டை அருகே உள்ள சிங்கம்பேட்டை சின்னசீரனூர் பகுதியை சேர்ந்தவர் வி.பெருமாள் (வயது 45). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 13-3-2020 அன்று அங்குள்ள வாய்க்கால்மேடு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மாணவி ஒருவர் சைக்கிளில் சென்றார். அவரைப்பார்த்த பெருமாள், மாணவியை நிறுத்தி நைசாக பேசி ஏமாற்றி, அருகில் உள்ள கரும்பு தோட்டத்துக்கு அழைத்துச்சென்றார்.

பின்னர் அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் செய்வது அறியாத சிறுமி பயந்து அழுதார். கண்ணீருடன், வீட்டுக்கு சென்ற அவர், பாட்டியிடம் நடந்த விவரத்தை கூறினார். அதைத்தொடர்ந்து பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவியின் தாய் மற்றும் பாட்டி புகார் செய்தனர்.

9-ம் வகுப்பு மாணவி

இதுகுறித்து அப்போதைய இன்ஸ்பெக்டர் வினோதினி விசாரணை நடத்தினார். அதில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வயது 14 என்பதும் அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. பாட்டி மற்றும் தாயாருடன் வசித்து வந்துள்ளார்.

மாணவி தினமும் வீட்டில் இருந்து சைக்கிளில் பள்ளிக்கு சென்று வருவதும், இதை கவனித்த கூலித்தொழிலாளியான பெருமாள், சிறுமிக்கு ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தது, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

தொழிலாளிக்கு சிறை

அதைத்தொடர்ந்து பெருமாள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக போலீசார் ஈரோடு மாவட்ட மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி ஆர்.மாலதி விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

அதில் குற்றம் சாட்டப்பட்ட கூலித்தொழிலாளி பெருமாளுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்கவும் அந்த தீர்ப்பில் நீதிபதி கூறி இருந்தார்.

சிறுமிக்கு ரூ.5 லட்சம்

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.5 லட்சம் நிதியை தமிழக அரசு வழங்கவும் நீதிபதி ஆர்.மாலதி அந்த தீர்ப்பில் பரிந்துரை செய்து உள்ளார்.

இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் எம்.ஜெயந்தி ஆஜர் ஆனார்.


Next Story