நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்


நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்
x

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று தொடங்கின. முன்னதாக மாணவர்களுக்கு பூக்கள் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி

2023- 2024-ம் ஆண்டு மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. இதில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் தமிழக அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் இடம் பெற்ற மாணவர்கள் உள்பட 250 மாணவர்கள் சேர்க்கை பெற்றனர். அவர்களுக்கான வகுப்புகள் நேற்று முதல் தொடங்கியது. முதல் நாளில் 250 மாணவர்களில் 228 மாணவர்களும் தங்களின் பெற்றோர், உறவினர்களுடன் மருத்துவக்கல்லூரிக்கு வந்தனர். அவர்களை கல்லூரியின் 3-ம் ஆண்டு மாணவ- மாணவிகள் பூக்கள் மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர்.

தொடர்ந்து கல்லூரி அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், கல்லூரியில் உள்ள வசதிகள் குறித்தும், சட்ட திட்டங்கள், விடுதி வசதிகள் குறித்தும் விளக்கி கூறினார். மேலும் மக்களுக்கு சேவையாற்றுவதே மருத்துவர்களின் முதற்கடமை. இதனை திறம்பட செய்ய சிறப்பாக படிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் சுரேஷ் துரை, மருத்துவ கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை தலைவர்கள், மாணவ-மாணவிகளின் விடுதி காப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story