பயன்படுத்த முடியாத நிலையில் வகுப்பறைகள்


பயன்படுத்த முடியாத நிலையில் வகுப்பறைகள்
x

பயன்படுத்த முடியாத நிலையில் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் உள்ளது. எனவே இங்கு படித்த மாணவர்களின் கல்விக்கு மாற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, பள்ளியில் ஆய்வு செய்த கல்வி அதிகாரி தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி. முதல் பிளஸ்-2 வரை 3,500 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள்.

இந்த நிலையில் இப்பள்ளி மாணவி ஸ்ரீமதியின் இறப்புக்கு நீதிக்கேட்டு நேற்று முன்தினம் நடந்த போராட்டம், கலவரமாக வெடித்து பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டதுடன், பள்ளி வளாகம், பஸ்கள் என்று அனைத்திற்கும் கலவரக்காரர்கள் தீ வைத்தனர்.

இதனால், இந்த பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளின் கல்வி என்ன ஆக போகிறது என்பது, தற்போது பலரால் முன்வைக்கப்படும் கேள்வியாகும்.

கல்வி அதிகாரி ஆய்வு

இந்த சூழ்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜயலட்சுமி தலைமையிலான கல்வித்துறை அதிகாரிகள் நேற்று பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது, சூறையாடப்பட்ட வகுப்பறைகள், அலுவலக அறைகள் மற்றும் தீயில் எரிந்து உருக்குலைந்த பஸ்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் பார்வையிட்டனர்.

சான்றிதழ்கள் எரிந்துவிட்டது

ஆய்வு முடிவில் விஜயலட்சுமி கூறுகையில், பள்ளியின் தற்போதைய நிலை குறித்த அய்வு மேற்கொண்டோம். இதில் மாணவ, மாணவிகளின் கல்வி சான்றிதழ்கள் முற்றிலும் எரிந்து விட்டது.

பள்ளி கட்டிடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. எனவே இங்கு படித்த மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், மாற்று நடவடிக்கை மேற்கொள்ள அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வோம் என்றார்.

ரூ.15 கோடி சேதம்

இதேபோன்று, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் செல்வம் நேரில் சென்று தீ வைத்து கொளுத்தப்பட்ட வாகனங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட பொதுப்பணித்துறை (கட்டிடம்) செயற்பொறியாளர் பிரமிளா தலைமையிலான பொதுப்பணித்துறை அதிகாரிகள் குழுவினர் நேற்று பள்ளிக்க நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது பள்ளியின் கட்டமைப்பு வசதிகள் குறித்தும், பள்ளி கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்தும் ஆய்வு நடத்தினர்.

பள்ளியில் சேதமதிப்பீடு குறித்து கணக்கீட்டதில் மொத்தம் ரூ.15 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டு இருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.


Next Story