நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் தர்ணா
திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டிவனம்,
திண்டிவனம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குப்பைகளை சேகரித்து அகற்றுவதற்காக 65 பெண்கள் உள்பட 175 துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.419 ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது ரூ.59 குறைக்கபட்டு, துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியமாக ரூ.360 வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதை கண்டித்தும், குப்பைகளை அப்புறப்படுத்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக்கோரியும் நேற்று காலை திண்டிவனம் நகராட்சி அலுவலக வளாகத்தில் துப்புரவு பணியாளர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் திண்டிவனம் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிடிக்கப்பட்ட பணம் உடனே துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்படும் என துப்புரவு பணியாளர்களின் சட்ட ஆலோசகர் ஜெயராஜ்யிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை ஏற்று துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.