பொற்றாமரை குளத்தில் செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்யும் பணி


பொற்றாமரை குளத்தில் செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்யும் பணி
x
தினத்தந்தி 9 July 2023 9:55 PM GMT (Updated: 10 July 2023 11:44 AM GMT)

கும்பகோணத்தில் உள்ள பொற்றாமரை குளத்தில் வளர்ந்திருந்த செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர்

கும்பகோணம்:

கும்பகோணத்தில் உள்ள பொற்றாமரை குளத்தில் வளர்ந்திருந்த செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

சாரங்கபாணி சாமி கோவில்

கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி சாமி கோவில் உள்ளது. 108 வைணவ கோவில்களில் 3-வது கோவிலாக விளங்கும் சாரங்கபாணி கோவிலுக்கு சொந்தமான பொற்றாமரை குளம் கோவிலின் பின்புறம் அமைந்துள்ளது. சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பொற்றாமரை குளத்தில் மாசி மக தெப்ப உற்சவம் மற்றும் மாசி மகா தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம்.

இந்த நிலையில் பொற்றாமரை குளத்தில் கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் தேங்காமல் வறண்டு காணப்பட்டது. பொற்றாமரை குளத்தில் தண்ணீர் நிரந்தரமாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கும்பகோணம் அன்பழகன் எம். எல்.ஏ.விடம் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

ஆழ்துளை கிணறு

அதன்படி எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில் பொற்றாமரை குளத்தின் அருகே 350 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மின் மோட்டார் பம்பு செட் மூலம் கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி முதல் குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டது.

ஆனால் குளத்தில் ஏற்கனவே வளர்ந்திருந்த செடி,கொடிகள் தண்ணீரில் மூழ்கி அழுகியதால் குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்ட பிறகு குளத்தில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது.

செடி, கொடிகள் அகற்றும் பணி

இதனைத் தொடர்ந்து குளத்தில் இருந்த செடி,கொடிகள் கோரை புற்கள் உள்ளிட்ட கழிவுகளை அகற்றி கீழே உள்ள மண்ணை சீர்படுத்தி புதிதாக தண்ணீர் நிரப்ப சாரங்கபாணி கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த சில தினங்களாக குளத்தில் இருந்த நீர் வெளியேற்றப்பட்டு குளம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது குளம் முழுவதுமாக தண்ணீர் வற்றி வறண்டு காணப்படும் நிலையில் குளத்தில் இருந்த கழிவுகளை பொக்லின் எந்திரம் மூலம் முழுவதுமாக அகற்றப்பட்டு, குளத்தின் மண் தரையை சமப்படுத்தும் பணியை கோவில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தண்ணீர் நிரப்பப்படும்

இதுகுறித்து கோவில் அலுவலர்கள் கூறியதாவது:- தற்போது பொக்லின் எந்திரன் மூலம் பொற்றாமரை குளத்தில் உள்ள கழிவுகளை அகற்றி அதில் உள்ள மண்ணை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கழிவுகள் முற்றிலும் அகற்றப்பட்ட பிறகு குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story