அரசு அலுவலகங்களை தூய்மை செய்யும் பணி


அரசு அலுவலகங்களை தூய்மை செய்யும் பணி
x

அரசு அலுவலகங்களை தூய்மை செய்யும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களை தூய்மை செய்யும் சேவைப்பணி ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை காவலர்களுடன் இணைந்து தூய்மைப்பணிகளை கலெக்டர் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட தூய்மை காவலர்கள், ஊரகப்பகுதிகளில் பணியாற்றும் தூய்மை காவலர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் நேரு யுவகேந்திராவில் உள்ள தன்னார்வ இளைஞர்கள் இணைந்து கலெக்டர் அலுவலகத்தை சுற்றிலும் உள்ள பகுதிகளில் தூய்மைப்பணிகளை மேற்கொண்டனர். மேலும், அந்தந்த அரசு அலுவலகங்களில் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் அலுவலகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக தூய்மையே சேவை இயக்கத்தின் சார்பில் தூய்மை பணி செய்வதின் முக்கியத்துவம் குறித்த உறுதிமொழியை கலெக்டர் வாசித்தார். அதனை தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் கலெக்டர் கூறுகையில், உறுதிமொழி எடுத்துக் கொள்வது மட்டுமல்லாமல் நமது சுற்றுப்புற பகுதிகளையும் தூய்மையாக வைத்துக் கொள்வது நமது கடமை. கிராமப்புறங்களில் நீர் நிலைகள், பொது இடங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும். குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என முறையாக பிரித்தெடுக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ராமர், மகளிர் திட்ட இயக்குனர் அருணாச்சலம், நேருயுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் கீர்த்தனா, தூய்மை இந்தியா இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story