சாலைகளை தூய்மைப்படுத்தும் பணி; மேயர் சரவணன் தொடங்கி வைத்தார்
நெல்லையில் சாலைகளை தூய்மைப்படுத்தும் பணியை மேயர் சரவணன் தொடங்கி வைத்தார்.
நெல்லை டவுன் பகுதி 19, 21 மற்றும் 26-வது வார்டு பகுதிகளில் மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர். ராஜூ ஆகியோர் ஆய்வு செய்தனர். மேலும் 26-வது வார்டில் ரூ.40 லட்சத்தில் மகிழ்வண்ணபுரம், கம்பகடை தெரு பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகளை மேயர் தொடங்கி வைத்தார். பின்னர் அந்த பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று கழிவுநீரோடை, பாலம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் 19-வது வார்டு கக்கன்ஜி நகர், ரகுமான் பேட்டை, 21-வது வார்டு கட்டபொம்மன் தெரு, அசோகர் தெரு, பசும்பொன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சி திட்ட பணிகளையும் பார்வையிட்டனர். கவுன்சிலர் நித்திய பாலையா, உதவி ஆணையாளர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து நெல்லை மாநகராட்சி 4 மண்டல பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகர்ப்புற சாலைகளை தூய்மைப்படுத்தும் பணியை மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் தொடங்கி வைத்தனர். டவுன் 4 ரதவீதிகள், ஆர்ச், எஸ்.என்.ஹைரோடு, திருச்செந்தூர் ரோடு, பாளையங்கோட்டை பஸ் நிலையம், பொதிகை நகர், மேலப்பாளையம் அம்பை ரோடு பகுதிகளில் கூட்டு துப்புரவு பணிகள் நடைபெற்றது. மண்டல தலைவர்கள் பிரான்சிஸ், மகேசுவரி, ரேவதி பிரபு, மாநகர நல அலுவலர் சரோஜா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.