சித்திரை திருவிழாவையொட்டிமானாமதுரை வைகை ஆற்றை சுத்தம் செய்யும் பணி தீவிரம்


சித்திரை திருவிழாவையொட்டிமானாமதுரை வைகை ஆற்றை சுத்தம் செய்யும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சித்திரை திருவிழாவையொட்டி மானாமதுரை வைகையாற்றை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்தாண்டு திருவிழாவில் பொழுது போக்கு நிகழ்ச்சியாக ராட்டினங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை

மானாமதுரை

சித்திரை திருவிழாவையொட்டி மானாமதுரை வைகையாற்றை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்தாண்டு திருவிழாவில் பொழுது போக்கு நிகழ்ச்சியாக ராட்டினங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சித்திரை திருவிழா

மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவிற்கு அடுத்தபடியாக மானாமதுரையில் உள்ள ஆனந்தவல்லி-சோமநாதர் கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழா மிகவும் புகழ் பெற்றதாகும். இந்த திருவிழாவில் மானாமதுரையை சுற்றியுள்ள ஏராமான கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து வைகையாற்றங்கரையில் தங்கியிருந்து கலந்துகொள்வது வழக்கம். மேலும் இந்த திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும்.

இத்தகைய சிறப்பு பெற்ற இந்த விழா வருகிற 25-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக வருகிற மே 5-ந்தேதி ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சுத்தம் செய்யும் பணி

இதற்காக தற்போது வைகையாற்றை சுத்தம் செய்யும் பணி நகராட்சி நிர்வாகம் சார்பில் நகர் மன்ற தலைவர் மாரியப்பன்கென்னடி, துணைத்தலைவர் பாலசுந்தரம் மற்றும் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கண்ணன் ஆகியோர் முன்னிலையில் தற்போது பொக்லைன் மற்றும் டிராக்டர் ஆகிய வாகனங்கள் மூலம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ராட்டினங்களுக்கு அனுமதி

மேலும் தற்போது விடுமுறை தினமாக உள்ளதால் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்ட நிலையில் இந்தாண்டு அதிகளவில் மக்கள் கூட்டம் கூடும் என்பதை கருத்தில் கொண்டு மானாமதுரை வைகையாற்றில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி மற்றும் தற்காலிக கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் நகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

மேலும் இந்த விழாவையொட்டி வைகையாற்று பகுதியில் 10 நாட்கள் வரை பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக சிறுவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ராட்டினம், டோரா டோரா, மின் ரெயில், சர்க்கஸ், உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்து அங்கு ராட்டினங்கள் அமைக்க வேண்டும். மேலும் இவ்வாறு ராட்டினங்கள் அமைப்பதற்காக பலரும் விண்ணப்பித்து வரும் நிலையில் திருவிழாவில் கலந்துகொள்ளும் மக்களுக்கு பொழுதுபோக்கு வசதிக்காக விரைவாக ராட்டினங்களுக்கு உரிமம் வழங்க வேண்டும் என மானாமதுரை பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story