திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்


திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்
x

ஓய்வூதிய பலன்கள் வழங்கக்கோரி, திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்துக்கு நேற்று தூய்மை பணியாளர்கள் சுமார் 20 பேர் திரண்டு வந்தனர். பின்னர் அண்ணா துப்புரவு பணியாளர் சங்கத்தின் தலைவர் பெருமாள் தலைமையில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஓய்வுபெற்ற தூய்மை பணியாளர்களுக்கு அனைத்து விதமான பணப்பலன்களை தாமதமின்றி உடனுக்குடன் வழங்க வேண்டும்.

இதேபோல் இறந்து போன பணியாளர்களின் பணப்பலன்களை அவர்களின் வாரிசுதாரர்களிடம் வழங்க வேண்டும். மேலும் நிரந்தர தூய்மை பணியாளர்களை அதிகநேரம் வேலை வாங்குவதை கைவிட்டு, 8 மணி நேரம் மட்டுமே வேலை வாங்க வேண்டும். மாநகராட்சியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதிய அடிப்படையிலும், சுயஉதவிக்குழுக்கள் மூலமாகவும் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை மாநகராட்சியின் நேரடி பார்வையில் வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதையடுத்து அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தூய்மை பணியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. ஓய்வூதிய பணப்பலன்களை வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து, முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story