விளாத்திகுளம் வைப்பாற்றை சுத்தப்படுத்தும் பணி


விளாத்திகுளம் வைப்பாற்றை சுத்தப்படுத்தும் பணி
x

விளாத்திகுளம் வைப்பாற்றை சுத்தப்படுத்தும் பணி நடந்தது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் பேரூராட்சியுடன் இணைந்து மரங்கள் மக்கள் இயக்கம் சார்பில், விளாத்திகுளம் தொகுதி முழுவதும் 5 ஆண்டுகளில் 1 கோடி மரக்கன்றுகள் நட முடிவு செய்து பணிகள் நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று விளாத்திகுளம் வைப்பாற்று பகுதியில் உள்ள கருவேல மரங்களை அகற்றி சுத்தப்படுத்தும் பணி நடந்தது. இதை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் முன்னிலையில், தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், சராசரியாக 33 சதவீத வனப்பகுதி இருக்க வேண்டிய தமிழ்நாட்டில் 23 சதவீதம் தான் உள்ளது. அதிலும், தூத்துக்குடியில் வெறும் 6 சதவீதம் மட்டுமே உள்ளது. ஆகையால், நாம்‌ அனைவரும் அதிக அளவிலான மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை பசுமையான சூழலாக உருவாக்க வேண்டும் என்றார்.

இதைத்தொடர்ந்து அவர் விளாத்திகுளம் பகுதியில் நடப்பட உள்ள மரக்கன்றுகளையும், வைப்பாற்று படுகையில் கருவேல மரங்கள் அகற்றும் பணியையும் பார்வையிட்டார். மரங்கள் மக்கள் இயக்கத்துக்கு வழங்குவதற்காக 12-ம் வகுப்பு மாணவி காவியா தனது சேமிப்பு ரூபாய் 3 ஆயிரத்துக்கான காசோலையை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.விடம் வழங்கினார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி, விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரவேல், பேரூராட்சி தலைவர் அய்யன் ராஜ், துணைத்தலைவர் வேலுச்சாமி, மரங்கள் மக்கள் இயக்க நிர்வாக அதிகாரி ராகவன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சின்ன மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story