மலை ரெயில் பாதையில் தூய்மை பணி
யானைகளின் கழிவுகளில் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததன் எதிரொலியாக, மலை ரெயில் பாதையில் தூய்மை பணி நடந்தது. இதில் 21 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டது.
குன்னூர்
யானைகளின் கழிவுகளில் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததன் எதிரொலியாக, மலை ரெயில் பாதையில் தூய்மை பணி நடந்தது. இதில் 21 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டது.
காட்டு யானைகள்
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
குன்னூர்-மேட்டுப்பாளையம் ரெயில் பாதையின் இருபுறமும் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. மேலும் காபி, தேயிலை தோட்டங்கள் உள்ளது. காபி தோட்டங்களில் உள்ள பலா மரங்களில் பழங்கள் காய்த்து தொங்குகின்றன. பலாப்பழ சீசன் காரணமாக சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் மலைப்பாதை, ரெயில் பாதையில் முகாமிட்டு வருகின்றன.
தூய்மை பணி
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயிலில் வரும் சுற்றுலா பயணிகள் தின்பண்டங்கள் பயன்படுத்திய பின்னர் பிளாஸ்டிக் பொருட்களை ரெயில் பாதையில் ஓரத்தில் வீசி விட்டு செல்கின்றனர். இதனால் உணவு தேடி வரும் யானைகள், பசுந்தீவனத்தில் பிளாஸ்டிக் பொருட்களும் கலந்து விடுகின்றன. கடந்த வாரம் யானைகளின் கழிவுகளில் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் வன ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து இதற்கு வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்ைக விடுத்தனர். தொடர்ந்து நேற்று குன்னூர்-மேட்டுப்பாளையம் ரெயில் பாதையில் தூய்மை பணி நடைபெற்றது. குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர், ரெயில்வே ஊழியர்கள், காட்டேரி பூங்கா பணியாளர்கள் குன்னூர் முதல் ரன்னிமேடு வரை உள்ள ரெயில் பாதையில் கிடந்த பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் உள்ளிட்ட பொருட்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து வனச்சரகர் ரவீந்திரநாத் கூறும்போது, நேற்று நடந்த தூய்மை பணியில் 21 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டு உள்ளது. வரும் நாட்களில் ஊட்டியில் இருந்து ஹில்குரோவ் வரை தூய்மை பணி நடைபெறும் என்றார்.