திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகை

கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டனர். மேலும் மேயர் வீட்டுக்கும் சென்று அவர்கள் முறையிட்டனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டனர். மேலும் மேயர் வீட்டுக்கும் சென்று அவர்கள் முறையிட்டனர்.
தூய்மை பணியாளர்கள்
திண்டுக்கல் மாநகராட்சியில் 400-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்க்கின்றனர். இந்த நிலையில் நேற்று அவர்கள் மாநகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். மேலும் அவர்கள், ஆணையாளர் அறை முன்பு தரையில் அமர்ந்து திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் தொழிலாளர் வைப்புநிதி தொகையை தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் இருந்து பெற்றுத்தர வேண்டும். இதுவரை அந்த தொகையை வழங்காத தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணி வழங்காமல் மாநகராட்சி கட்டுப்பாட்டில் செயல்படும் சுயஉதவிக்குழுக்கள் மூலம் பணி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேயர் வீட்டுக்கு சென்றனர்
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகளும், துணை மேயர் ராஜப்பாவும் தூய்மை பணியாளர்களிடம் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் தூய்மை பணியாளர்கள் சமாதானம் அடையவில்லை. அதையடுத்து தங்களின் கோரிக்கை குறித்து மேயர் இளமதியிடம் முறையிட சென்றனர். ஆனால் அவர் அலுவலகத்தில் இல்லை. சிறிது நேரத்தில் மேயர் அவருடைய வீட்டில் இருப்பதாக தூய்மை பணியாளர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவருடைய வீட்டுக்கே தூய்மை பணியாளர்கள் சென்று தங்களின் கோரிக்கை குறித்து முறையிட்டனர். அப்போது பேசிய மேயர் இளமதி, தூய்மை பணியாளர்களின் பிரச்சினை குறித்து உயர்மட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.






