தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்; குப்பை கூளமானது மதுரை


தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்; குப்பை கூளமானது மதுரை
x

தூய்மை பணியாளர்களின் போராட்டத்தால் மதுரை நகரம் குப்பை கூளமானது.

மதுரை

மதுரை,

தூய்மை பணியாளர்களின் போராட்டத்தால் மதுரை நகரம் குப்பை கூளமானது.

28 அம்ச கோரிக்கை

மதுரை மாநகராட்சி வருமானத்தில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஊழியர்களின் சம்பளத்திற்கு செலவு செய்யப்படுவதால் காலி பணியிடங்களில் புதிய பணியாளர்களை நியமிப்பதில் தடை இருக்கிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம், ஒப்பந்ததாரர் மூலம் பணியாளர்களை நியமித்து வருகிறது. இந்த பணியாளர்கள் மாநகராட்சியின் நிரந்தர பணியாளர்களுக்கு இணையாக வேலை செய்தாலும் சொற்ப தொகையே சம்பளமாக வழங்கப்படுகிறது.

அதே போல் ஒப்பந்த ஊழியர்களுக்கு சேமநல நிதி, இ.எஸ்.ஐ சேவைகள் வழங்குவதிலும் தொடர் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. ஓப்பந்தகாரர் மூலம் நியமிக்கப்படும் ஊழியர்களில் அதிகளவு பாதிக்கப்படுவது தூய்மை பணியாளர்கள் தான்.

எனவே மாநகராட்சி சுகாதாரத்துறை மற்றும் பொறியியல் பிரிவை சேர்ந்த தூய்மை தொழிலாளர்கள் 28 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்ய போவதாக அறிவித்தனர். குறிப்பாக மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் தினக்கூலி தூய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற ஐகோர்ட்டு உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.தினக்கூலி மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு தினச்சம்பளமாக அரசு அறிவித்த ரூ.625-ஐ வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

1,600 டன் குப்பை

இந்த வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பை தொடர்ந்து மாநகராட்சி சார்பில் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் பலன் ஏற்படவில்லை. இதனால் 30-ந் தேதி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். 2-ம் நாளாக நேற்றும் இந்த போராட்டம் நடந்தது. அதனால் நகரில் தேங்கிய குப்பைகள் அள்ளப்படாமல் இருந்தது. மாநகராட்சி பகுதியில் இருந்து தினந்தோறும் சுமார் 800 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. 2 நாட்கள் குப்பைகள் அப்புறப்படுத்தாததால் சுமார் 1600 டன் குப்பைகள் நகரில் தேங்கி இருந்தது.

சாலைகளில் உள்ள பெரிய தொட்டிகள் நிரம்பி வழிந்து குப்பைகள் சாலைகளில் சிதறி கிடந்தது. பொதுமக்களும் வேறு வழியின்றி சாலைகளில் குப்பைகளை போட்டு சென்றனர். அதே போல் பல இடங்களில் பாதாள சாக்கடை அடைப்பு சரி செய்யப்படாததால் சாலைகளில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடியது. தூய்மை ஊழியர்களில் 2 நாள் தொடர் போராட்டத்தால் மதுரை நகரம் குப்பை கூளமாக காட்சி அளித்தது.


Related Tags :
Next Story