பள்ளிகளில் தூய்மை பணிகள் தீவிரம்
தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளில் தூய்மை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தஞ்சாவூர்;
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 1-ந்தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவதாக இருந்தது. ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறப்பு 7-ந்தேதிக்கு மாற்றப்பட்டது.இந்த நிலையில் வெயிலின் தாக்கம் குறையாத காரணத்தால் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 14-ந்தேதியும், 6 முதல் பிளஸ்-2 மாணவர்களுக்கு நாளை (திங்கட்கிழமை) 12-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பள்ளிகள் அனைத்திலும் வருகை பதிவேடு, மேஜை நாற்காலிகள் போன்றவை போடப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே மாணவ-மாணவிகளுக்கு நோட்டு மற்றும் புத்தகங்கள் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.அதன்படி மாவட்டத்தில் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு நோட்டு மற்றும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இதற்கிடையே அனைத்து பள்ளிகளில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளி வளாகத்தில் தேவையில்லாமல் வளர்ந்திருந்த செடி, கொடிகள் வெட்டி அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.மேலும் மேஜை மற்றும் நாற்காலிகளில் படிந்திருந்த தூசியை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்தனர். மேலும் குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. தஞ்சை மாநகராட்சியில் உள்ள தென்கீழ் அலங்கம் அரசு பள்ளி, அரசர் மேல் நிலைப்பள்ளி, அரண்மனை வளாகத்தில் உள்ள அரசினர் பெண்கள் மேல் நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் தூய்மை பணிகள் நடைபெற்று வருகின்றன.