"தூய்மையே சேவை" விழிப்புணர்வு நிகழ்ச்சி


தூய்மையே சேவை விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

“தூய்மையே சேவை” விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர்

விழிப்புணர்வு நிகழ்ச்சி

மத்திய-மாநில அரசுகள் இணைந்து தூய்மை பாரத இயக்க திட்டத்தை (ஊரகம்) செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி வரை தூய்மையே சேவை எனும் இரு வார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அனைத்து கிராம ஊராட்சிகளிலும் செயல்படுத்த மத்திய-மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.

அதனடிப்படையில், பெரம்பலூர் ஒன்றியத்துக்குட்பட்ட செங்குணம் கிராம ஊராட்சியில் "தூய்மையே சேவை" எனும் இருவார விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட கலெக்டர் கற்பகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து கலெக்டர் தலைமையில் தூய்மையே சேவை எனும் உறுதிமொழியினை பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் ஏற்று கொண்டனர்.

மருத்துவ முகாம்

இதையடுத்து, கலெக்டர் செங்குணம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அனைத்து ஊராட்சிகளிலும் இந்திய தூய்மை போட்டி 2.0 குறித்து இளைஞர்களிடையே மாவட்ட மற்றும் வட்டார அளவில் போட்டிகள் நடத்துதல், கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்படவுள்ளது. அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுகாதார வசனங்கள் அடங்கிய சுவர் விளம்பரங்களை பொது இடம் அல்லது பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு சுவர் விளம்பரங்கள் வரைதல், அனைத்து பள்ளிகளிலும் தூய்மை குறித்து வினாடி-வினா நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு "தூய்மையே சேவை" நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அருளாளன், உதவி திட்ட அலுவலர் சென்னகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவழகன், தூய்மை பாரத இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜபூபதி, கிராம ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா கண்ணுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story