தூய்மை பணியை தீவிரப்படுத்த வேண்டும்


தூய்மை பணியை தீவிரப்படுத்த வேண்டும்
x

டெங்கு காய்ச்சல் அதிகமாக உள்ளதால் தூய்மை பணியை தீவிரப்படுத்த வேண்டும் என சோளிங்கர் ஒன்றியக்குழு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ராணிப்பேட்டை

ஒன்றியக்குழு கூட்டம்

சோளிங்கர் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம், ஒன்றியக் குழு தலைவர் கலைக்குமார் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வஜ்ரவேல், சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய பா.ம.க கவுன்சிலர் அ.ம.கிருஷ்ணன், ஒன்றியக்குழு தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்களை ஆலோசிக்காமல் 2022-ம் ஆண்டு பள்ளி கட்டிடங்களுக்கு பங்குத்தொகை வழங்கியதில் வட்டார வளர்ச்சி அலுவல அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக குற்றம்சாட்டினார்.

தூய்மை பணி

மேலும் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல இடங்களில் டெங்கு காய்ச்சல் அதிகமாக உள்ளதால் அப்பகுதிகளில் தூய்மை பணி, மருந்து தெளிக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். வரும் மழைக்காலங்களில் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும். ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் ஏற்கனவே வழங்கப்பட்ட பணிகள் முழுமை அடையாமல் உள்ளது. இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் ஒன்றியக்குழு கூட்டத்தில் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொள்வதில்லை எனவும், இனிவரும் காலங்களில் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்தனர்.

கூட்டத்தில் ராமன், மாரிமுத்து, நதியா, முருகன், சசிகலா, சாவித்திரி பெருமாள், வேண்டா சரவணன் உள்ளிட்ட அனைத்து ஒன்றிய கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.


Next Story