தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்


தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 2 Aug 2023 8:30 PM GMT (Updated: 2 Aug 2023 8:31 PM GMT)

சம்பள உயர்வு கோரி கூடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

கூடலூர்

சம்பள உயர்வு கோரி கூடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தூய்மை பணியாளர்கள்

கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் நிரந்தர மற்றும் தற்காலிக தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் சம்பளம் குறைவாக வழங்குவதாக தூய்மை பணியாளர்கள் நீண்ட காலமாக புகார் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் சம்பளம் குறைவாக வழங்குவதை கண்டித்தும், சம்பள உயர்வு கோரியும் கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் நேற்று தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்துவதற்காக திரண்டனர். தகவல் அறிந்த கூடலூர் போலீசார் விரைந்து வந்து தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தர்ணா போராட்டம்

அப்போது தங்களின் உரிமைகளுக்காக போராட்டம் நடத்த ஒத்துழைப்பு தருவதாகவும், அதனால் போக்குவரத்துக்கு இடையூறாக நின்று போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது. எனவே, நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது என தெரிவித்தனர். இதை ஏற்று கூடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தாசில்தார் ராஜேஸ்வரி, துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோர் தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தினக்கூலியாக ரூ.600-க்கு மேல் வழங்க வேண்டும். ஆனால், ரூ.300 என மாதத்துக்கு ரூ.9 ஆயிரம் வரை மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. தங்களுக்கு சம்பளம் மிக குறைவாக வழங்குவதாக ஒப்பந்ததாரர் மீது தூய்மை பணியாளர்கள் தெரிவித்தனர். மேலும் சம்பளம் உயர்வு கேட்ட 10 பேரை நீக்கி விட்டதாகவும் கூறினர்.

பேச்சுவார்த்தை

இதுதொடர்பாக வருகிற 6-ந் தேதி ஆர்.டி.ஓ. முன்னிலையில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தாசில்தார், துணை போலீஸ் சூப்பிரண்டு உறுதியளித்தனர். எனவே, அனைவரும் வேலைக்கு செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டனர். மேலும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு யாரையும் வேலையை விட்டு நீக்கக்கூடாது என உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு சென்றனர்.


Next Story