பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை விரைவில் மூட வேண்டும்
திருவாரூர் மாவட்டத்தில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள், கட்டுமான குழிகளை கண்டறிந்து மூட வேண்டும் என கலெக்டர் சாருஸ்ரீ அறிவுறுத்தியுள்ளார்.
திருவாரூர்;
திருவாரூர் மாவட்டத்தில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள், கட்டுமான குழிகளை கண்டறிந்து மூட வேண்டும் என கலெக்டர் சாருஸ்ரீ அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள்
திருவாரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகள், திறந்தவெளி கிணறுகள், கட்டுமான குழிகள், குவாரி மற்றும் சுரங்க குழிகள் ஆகியவற்றை கண்டறிந்து பொதுமக்கள் மற்றும் விலங்குகளுக்கு ஆபத்துகள் ஏற்படா வண்ணம் அவற்றை அகற்றுவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோரின் பாதுகாப்புக்கு பணிகள் நடைபெறும் இடங்களில் தடுப்பு அரண்கள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் அமைப்பதும் மிகவும் அவசியமாகும்.
சுற்றுச்சுவர்
எனவே, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள், திறந்தவெளி கிணறுகள், கட்டுமான குழிகள் மற்றும் குவாரி குழிகள் ஆகியவற்றை கண்டறிந்து உடனடியாக மூட வேண்டும். பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூடி, பயன்பாடற்ற திறந்தவெளி கிணறுகளை சுற்றி பாதுகாப்பான முறையில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.
எச்சரிக்கை அறிவிப்பு பலகை
மேலும் கட்டுமான குழிகள் மற்றும் குவாரி, சுரங்க குழிகள் அருகே பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் அமைக்க வேண்டும். பயன்படுத்தப்படாத குவாரிகளில் தேங்கியுள்ள தண்ணீரில்இளைஞர்கள் குளிப்பதற்கோ அல்லது விளையாடுவதற்கோ அனுமதிக்காமல் எச்சரிக்கை பலகைகள் அமைத்து கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.