நடப்பாண்டு முதல் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடல் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
மீண்டும் சமூக நலத்துறை வசம் மழலையர் வகுப்புகள் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை,
கடந்த 2018ம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள 2381 அரசு பள்ளிகளில் எல்கேஜி , யூகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட எல்கேஜி , யூகேஜி வகுப்புகள் நடப்பு கல்வி ஆண்டு முதல் மூடப்பட்டு மாணவர் சேர்க்கை நிறுத்தப்படுகிறது. எல்கேஜி யுகேஜி வகுப்புகளை வரும் கல்வியாண்டு முதல் மூடுவதாக தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதற்கு மாற்றாக மீண்டும் சமூக நலத்துறை வசம் மழலையர் வகுப்புகள் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தொடக்க கல்வி துறையில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கும் நிலையில் ஆசிரியர்களை ஒன்றாம் வகுப்பு முதல் பாடம் கற்பிக்க பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அங்கன்வாடிகளில் குழந்தைகள் வழக்கம் போல் சென்று படிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.