பார்சன்ஸ்வேலி அரசு பள்ளி மூடல்


பார்சன்ஸ்வேலி அரசு பள்ளி மூடல்
x
தினத்தந்தி 23 Jun 2023 1:15 AM IST (Updated: 23 Jun 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

மாணவர் சேர்க்கை இல்லாததால் பார்சன்ஸ்வேலி அரசு பள்ளி மூடப்பட்டது. இதனால் கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நீலகிரி

ஊட்டி

மாணவர் சேர்க்கை இல்லாததால் பார்சன்ஸ்வேலி அரசு பள்ளி மூடப்பட்டது. இதனால் கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அரசு பள்ளி

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள பார்சன்ஸ்வேலி பகுதியில் கடந்த 1961-ம் ஆண்டு நீர்மின் உற்பத்திக்காக அணை கட்டப்பட்டது. இதன் கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் நோக்கத்தில் 1962-ம் ஆண்டு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள அரசு தொடக்க பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.

அப்போது அந்த பள்ளியில் 200-க்கும் மேற்பட்டோர் படித்து வந்தனர். மேலும் 7 ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் ஈடுபட்டனர். காலப்போக்கில் அங்கு மின்வாரியத்தில் பணியாற்றியவர்கள் ஓய்வு பெற்றோ அல்லது பணியிட மாறுதல் பெற்றோ சென்றதால் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைய தொடங்கியது.

ஒரேயொரு மாணவி

அங்கு தற்போது 30-க்கும் குறைவாக குடும்பங்களே வசித்து வருகின்றனர். இதனால் கடந்த 10 ஆண்டுகளாக மாணவர்கள் எண்ணிக்கை 10 என்ற அளவிலேயே இருந்து வந்தது. தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர் மட்டும் பணியாற்றி வந்தனர்.

இதற்கிடையில் கடந்த 2021-22-ம் கல்வியாண்டில் படித்து வந்த 4 மாணவர்களும் தேர்ச்சி பெற்று உயர் கல்விக்கு சென்று விட்டனர். இதனால் 2022-23-ம் கல்வியாண்டில் மாணவி ஒருவர் மட்டும் 1-ம் வகுப்பில் சேர்ந்தார். தலைமை ஆசிரியர் மட்டும் அந்த மாணவிக்கு பாடம் நடத்தி வந்தார்.

சேர்க்கை இருந்தால்...

இ்ந்தநிலையில் ஒரே ஒருவராக படித்து வந்த அந்த மாணவி தேர்ச்சி பெற்று 2-ம் வகுப்பிற்கு வேறு பள்ளிக்கு சென்று விட்டார். வேறு மாணவர்கள் யாரும் சேராத நிலையில் நடப்பு கல்வியாண்டில் பார்சன்ஸ்வேலி அரசு தொடக்க பள்ளி மூடப்பட்டது. இதனால் கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி ஜெயக்குமார் கூறுகையில், பார்சன்ஸ்வேலி பள்ளியில் இந்த ஆண்டு இதுவரை மாணவர்கள் யாரும் வரவில்லை.

ஆனாலும் அந்த பகுதியில் உள்ள வட்டார கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியர் மூலம் கணக்கெடுப்பு நடத்தி மாணவர் சேர்க்கைக்கு வாய்ப்புள்ளதா? என்று ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது. வாய்ப்பு இருந்தால் வருகிற நாட்களில் மாணவர் சேர்க்கை நடக்கும், இல்லாவிட்டால் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை இருக்கும் பட்சத்தில் மீண்டும் பள்ளி திறக்கப்படும் என்றார்.


Next Story