ரூ.26¾ கோடியில் நவீன பஸ் நிலையம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு


ரூ.26¾ கோடியில் நவீன பஸ் நிலையம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 23 Feb 2023 12:30 AM IST (Updated: 23 Feb 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில், ரூ.26¾ கோடியில் புதிய நவீன பஸ் நிலையம் கட்டப்பட உள்ளது. இந்த பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், பணிகளை உரிய காலத்திற்குள் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

திருவாரூர்

மன்னார்குடியில், ரூ.26¾ கோடியில் புதிய நவீன பஸ் நிலையம் கட்டப்பட உள்ளது. இந்த பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், பணிகளை உரிய காலத்திற்குள் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ரூ.26¾ கோடியில் புதிய பஸ் நிலையம்

2021-22-ம் ஆண்டிற்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானிய கோரிக்கையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி, காமராஜர் பஸ் நிலையம் மற்றும் சந்தைப்பேட்டை பஸ் நிலையம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து புதிய ஒருங்கிணைந்த நவீன பஸ் நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, மன்னார்குடியில் புதிய ஒருங்கிணைந்த நவீன பஸ் நிலைய கட்டுமானப் பணிகளுக்காக ரூ.26 கோடியே 76 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிக்காக பஸ் நிலையத்தின் உட்பகுதி மற்றும் வெளிப்பகுதியில் உள்ள நகராட்சி கடைகள் காலி செய்யப்பட்டு பஸ் நிலையத்தில் உள்ள பழைய கட்டிடங்களை இடிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த புதிய பஸ் நிலையத்தில் 50 பஸ் நிறுத்தங்கள், 117 புதிய கடைகள் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பிடம் ஆகியவை அமைக்கப்படுகிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 21-ந் தேதி திருவாரூர் வந்தார். அங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட அவர் இரவு திருவாரூரில் உள்ள தனது இல்லத்தில் தங்கினார். நேற்று 2-வது நாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இருந்து காரில் புறப்பட்டு மன்னார்குடி சென்றார்.

அப்போது அவர், மன்னார்குடி நகராட்சியில் ரூ.26¾ கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய ஒருங்கிணைந்த நவீன பஸ் நிலையத்திற்கான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உரிய காலத்திற்குள் முடிக்க உத்தரவு

இந்த பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிய ஒருங்கிணைந்த நவீன பஸ் நிலைய கட்டுமான பணிகளை உரிய காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது டி.ஆர்.பாலு எம்.பி., திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, எம்.எல்.ஏ.க்கள் பூண்டி.கலைவாணன், டி.ஆர்.பி.ராஜா, மன்னார்குடி நகராட்சி தலைவர் மன்னை சோழராஜன், நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story