மயிலாடுதுறையில் தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு


மயிலாடுதுறையில் தூர்வாரும் பணிகளை   முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
x

மயிலாடுதுறையில் தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை:-

மயிலாடுதுறையில் தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார்.

தூர்வாரும் பணிகள்

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் சிறப்பு தூர்வாரும் பணி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் பணிக்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதி மூலம் 4 ஆயிரத்து 965 கிலோ மீட்டர் நீளத்துக்கு தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் நடந்து வரும் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு நேற்று முன்தினம் திருச்சி வந்தார்.

2-வது நாளாக நேரில் ஆய்வு

பின்னர் அங்கிருந்து காரில் தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே வடபாதி கொக்கேரி கிராமத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத்தொடர்ந்து அங்கிருந்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணி வந்த அவர் அங்குள்ள ஓட்டலில் இரவு தங்கினார். நேற்று 2-வது நாளாக நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் அனந்தமங்கலத்திற்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நேரடி நெல் விதைப்பு நடந்து வரும் பணியை பார்வையிட்டு நெல் விதையை தூவினார்.

பின்னர் திருக்கடையூரில் உள்ள ராமச்சந்திர வடிகால் தூர்வாரப்பட்டதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்து பொறையாறு அருகே உள்ள நல்லாடை கிராமத்திற்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு எந்திரம் மூலம் நடவு செய்யும் பணியை பார்வையிட்டார்.

முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது பொதுமக்கள் கொடுத்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.


Next Story