உடுமலை அமராவதி நகருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை ரத்து
உடுமலை அமராவதி நகருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை ரத்து
உடுமலை,
உடுமலை அமராவதி நகருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர்
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள அமராவதி நகரில் சைனிக் பள்ளி உள்ளது. இந்த பள்ளி தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் ஆனதையொட்டி வருகிற 15 மற்றும் 16-ந் தேதி ஆகிய 2 நாட்கள் வைர விழா நடக்கிறது.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 15-ந்தேதி இரவு உடுமலை வழியாக திருமூர்த்திமலைக்கு சென்று பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் தங்குவதாகவும், அடுத்தநாள் (16-ந் தேதி) காலை அங்கிருந்து புறப்பட்டு அமராவதி நகருக்கு சென்று சைனிக் பள்ளி வைர விழாவில் கலந்து கொள்வதாகவும், விழா முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டு உடுமலை, பல்லடம் வழியாக கோவைக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு செல்வதாகவும் இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது.
பணிகள்
முதல்-அமைச்சரின் வருகை திட்டத்தையொட்டி உடுமலை- பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை, உடுமலையில் இருந்து திருமூர்த்திமலை வரை, அங்கிருந்து அமராவதி நகர் வரை மற்றும் அங்கிருந்து உடுமலை, பல்லடம் வழியாக கோவைக்கு செல்லும் திருப்பூர் சாலை ஆகிய சாலைகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சாலைகள் பளிச்சென்று இருக்கும் வகையில் சுத்தம் செய்யப்பட்டது.
திருமூர்த்தி அணை மற்றும் அமராவதி அணைக்கு வர்ணம் பூசும் பணிகள் நடந்தன. திருமூர்த்திமலையில் உள்ள பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகை புதுப்பொலிவு பெற்றது. உடுமலை நகரில் தளி சாலையில் உள்ள பொதுப்பணித்துறை ஆய்வாளர் மாளிகையில் வர்ணம்பூசும் பணிகள் நேற்று நடந்தது. பல்வேறு அரசு துறை அதிகாரிகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை துரிதமாக செய்து வந்தனர்.
வருகை ரத்து
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுக சிறப்பான வரவேற்பு கொடுப்பதற்கான ஏற்பாடுகளை தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஆர்.ஜெயராமகிருஷ்ணன் தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் செய்து வந்தனர்.
மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆன பிறகு முதல் முறையாக உடுமலைக்கு வர இருந்ததால் அவரை வரவேற்பதற்கான பணிகளில் தி.மு.க.வினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் முதல்-அமைச்சரின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக நேற்று மதியம் தெரியவந்தது.