முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் பங்கேற்க 29-ந் தேதி வரை பதிவு செய்யலாம்-அதிகாரி தகவல்


முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் பங்கேற்க 29-ந் தேதி வரை பதிவு செய்யலாம்-அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 25 Jan 2023 6:47 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் வீரர்-வீராங்கனைகள் 29-ந் தேதி வரை பதிவு செய்யலாம் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

முதல்- அமைச்சர் கோப்பை

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடைபெற உள்ளது. இந்த மாவட்ட அளவிலான போட்டிகள் பொது பிரிவில் 15 முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு தடகளம், சிலம்பம், இறகுப்பந்து, கபடி, கைப்பந்து ஆகிய போட்டிகள் நடத்தப்படுகிறது.

பள்ளி பிரிவில் 12 முதல் 19 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கும், கல்லூரி பிரிவில் 17 முதல் 25 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கும் தடகளம், சிலம்பம், கபடி, கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, ஆக்கி, மேஜைப்பந்து, கைப்பந்து, நீச்சல் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தடகளம், இறகுபந்து, எறிபந்து, சிறப்பு கைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. அரசு பணியாளர்கள் பிரிவில் தடகளம், செஸ், இறகுப்பந்து, கபடி, கைப்பந்து ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.

கால அவகாசம் நீட்டிப்பு

தற்போது பள்ளி, கல்லூரி மற்றும் பொது பிரிவு ஆகியவற்றிற்கு கிரிக்கெட் போட்டி ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்க விரும்பு வீரர்-வீராங்கனைகள் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். போட்டி நடைபெறும் அன்று நேரடியாக பங்கேற்க அனுமதியில்லை.

இந்த போட்டிகளில் பங்கேற்க பதிவு செய்வதற்கான கால அவகாசம் வருகிற 29-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், மாற்று திறனாளிகள் அனைவரும் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள இணையதளம் மூலம் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story