அமைச்சர் சேகர்பாபுவுக்கு சி.எம்.டி.ஏ. ஒதுக்கீடு: 10 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்


அமைச்சர் சேகர்பாபுவுக்கு சி.எம்.டி.ஏ. ஒதுக்கீடு: 10 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்
x

தமிழக அமைச்சர்கள் 10 பேரின் இலாகாக்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக கவர்னர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை, வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறையை இதுவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வகித்து வந்தார்.

வறுமை ஒழிப்பு திட்டங்கள், ஊரக கடன்கள் ஆகிய நிர்வாகத்தை அமைச்சர் பெரிய கருப்பன் கவனித்து வந்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையை சிவ.வீ.மெய்யநாதன் நிர்வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

10 அமைச்சர்கள்இலாகா மாற்றம்

அவர் தவிர மேலும் 10 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. அதற்கான அறிவிப்பை கவர்னர் மாளிகையான ராஜ்பவன் நேற்று அறிவித்துள்ளது. இதுகுறித்து ராஜ்பவன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முதல்-அமைச்சரின் பரிந்துரையின் பேரில் அமைச்சர்களின் இலாகாக்களில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு அங்கீகாரம் வழங்கி கவர்னர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை, வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரகக்கடன்கள் ஆகிய துறைகள் உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்படுகின்றன. அவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.

கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமியிடம் இருந்து அந்த துறை எடுக்கப்பட்டது. அவருக்கு ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியம் துறை வழங்கப்பட்டு உள்ளது. அவர் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.

சேகர்பாபுவுக்கு சி.எம்.டி.ஏ.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமியிடம் இருந்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) எடுக்கப்பட்டு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த கே.ஆர்.பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத்துறை வழங்கப்பட்டுள்ளது. அவர் கூட்டுறவுத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஏற்கனவே வகித்து வரும் பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன் ஆகியவற்றுடன் கதர் மற்றும் கிராமத்தொழில்கள் வாரியம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. அந்த துறையை இதுவரை அமைச்சர் ஆர்.காந்தி கவனித்து வந்தார்.

புள்ளியியல் துறை

வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரனிடம் இருந்து அந்தத்துறை எடுக்கப்பட்டு சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஆகிய துறை வழங்கப்பட்டுள்ளது. அவர் சுற்றுலாத்துறை அமைச்சர் என அழைக்கப்படுவார். சுற்றுலாத்துறையை இதுவரை அமைச்சர் மதிவேந்தன் நிர்வகித்து வந்தார்.

கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை, பூதானம், கிராமதானம் ஆகிய துறைகளை மட்டும் கவனிப்பார்.

நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் புள்ளியியல் துறை கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது. அந்த துறையை இதுவரை அமைச்சர் ஐ.பெரியசாமி கவனித்து வந்தார்.

வனத்துறை

உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை வழங்கப்பட்டுள்ள நிலையில், அதை நிர்வகித்து வந்த அமைச்சரிடம் தற்போது சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறை மட்டும் உள்ளது. சிவ.வீ.மெய்யநாதன் இனி சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.

சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த எம்.மதிவேந்தனிடம் வனத்துறை வழங்கப்பட்டு, அவர் இனி வனத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story