கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வேலூரில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்கள் வருகிற 12-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அனைத்து கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க துணைத் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் மில்டன் தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் டில்லிபாபு வரவேற்றார். நிர்வாகிகள் ரங்கநாதன், சந்தானம் உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில், கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மத்திய கூட்டுறவு வங்கியில் உதவி மேலாளர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும். ஓய்வு பெற்ற கூட்டுறவு பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் தினக்கூலி ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதில், ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி ஊழியர்களும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க உதவி பொருளாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.
வேலைநிறுத்தம்
நிர்வாகிகள் கூறுகையில், ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கையாக வருகிற 5-ந் தேதி சென்னையில் தர்ணா போராட்டமும், 12-ந் தேதி ஒருநாள் வேலை நிறுத்த போராட்டமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.