கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

நாகர்கோவிலில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் குமரி மாவட்ட கிளை சார்பில் நாகர்கோவிலில் அலெக்ஸாண்ட்ரா பிரஸ் ரோட்டில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், மத்திய கூட்டுறவு வங்கிகளில் உதவி மேலாளர் பிரிவில் நேரடி நியமனத்திற்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள 25 சதவீதம் பணிகள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட வேண்டும், கருணை ஓய்வூதியத்தை ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், மத்திய அரசு விவசாய கடன் வழங்கும் கூட்டுறவு வங்கிகளுக்கு கடந்த ஆண்டு வரை வழங்கி வந்த 2 சதவீதம் வட்டி உதவித்தொகையை தொடர்ந்து வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க இணை செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க தலைவர் அருமை தங்கம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க தலைவர் சுரேஷ் பிரபாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.


Next Story