கூட்டுறவு வங்கி பணியாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்


கூட்டுறவு வங்கி பணியாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
x
தினத்தந்தி 4 Oct 2023 12:15 AM IST (Updated: 4 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிகள் முடங்கியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிகள் முடங்கியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

எதிர்ப்பு

குமரி மாவட்டத்தில் 115 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சங்கங்களில் பல்நோக்கு சேவை மையம் மற்றும் விவசாய உள்கட்டமைப்பு ஆகிய நிதி திட்டங்களின் கீழ் பொருட்கள் வாங்க விருப்பம் உள்ள சங்கங்களில் மட்டுமே அந்த திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்று கூட்டுறவு துறையால் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஆனால் தற்போது நலிவடைந்த மற்றும் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் சங்கங்களிலும் விவசாய உபகரணங்கள் மற்றும் லாரி, டெம்போ போன்ற வாகனங்கள் வாங்கும் திட்டத்தை செயல்படுத்தும்படி நிர்பந்திக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதோடு பல்நோக்கு சேவை மையம் மற்றும் விவசாய உள்கட்டமைப்பு ஆகிய திட்டங்களின் கீழ் பொருட்கள் வாங்குவதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலகத்தில் மனுவும் அளிக்கப்பட்டது. எனினும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

விடுப்பு எடுத்து போராட்டம்

எனவே அடுத்த கட்ட நடவடிக்கையாக தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் 400-க்கு மேற்பட்ட பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன் காரணமாக பல கூட்டுறவு வங்கிகள் ஓரிரு பணியாளர்களுடன் இயங்கியது. மேலும் ஒரு சில கூட்டுறவு வங்கிகள் பணியாளர்கள் இன்றி மூடப்பட்டது. பணியாளர்கள் போராட்டம் காரணமாக பணிகள் முற்றிலும் முடங்கின. ஞாயிறு மற்றும் காந்தி ஜெயந்தி விடுமுறைக்கு பிறகு கூட்டுறவு வங்கிகள் நேற்று திறக்கப்பட்ட நிலையில் வங்கிகளில் பணிகள் முடங்கியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

பரபரப்பு

இந்த நிலையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க தலைவர் கிருஷ்ணன் தலைமையில் செயலாளர் சகாய திலகராஜ், பொருளாளர் வின்சென்ட்ராஜ், துணை தலைவர்கள் செல்வின் ஜோஸ், சந்திரகுமார் மற்றும் இணை செயலாளர்கள் ரமணி, வசந்த பிரபா உள்பட ஏராளமான நிர்வாகிகள் இணை பதிவாளர் அலுவலகம் முன் திரன்டனர்.

தங்களது கோரிக்கை தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதன் காரணமாக கலெக்டர் அலுவலக பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story