கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் தூத்துக்குடி மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் இளமாறன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வே.அக்னிமுத்துராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் வி.அந்தோணி பட்டுராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் மாநில இணைச்செயலாளர் அசாம் டேனியல் ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்கள், அதிகாரிகள் விரோத போக்கை கடைபிடித்து வரும் செங்கல்பட்டில் வீட்டு வசதி கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றி வரும் அதிகாரி மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் துணை பொதுச்செயலாளர் வெங்கடேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட துணை தலைவர் மகேந்திர பிரபு, வட்டத் தலைவர் கணேசன், ஓட்டப்பிடாரம் வட்ட செயலாளர் திருமாலை உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஜெ.லான்மிக்கேல் தளபதி நன்றி கூறினார்.