கருப்பு பேட்ஜ் அணிந்து கூட்டுறவு ஊழியர்கள் கலெக்டரிடம் கோரிக்கை
கருப்பு பேட்ஜ் அணிந்து கூட்டுறவு ஊழியர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்
சிவகங்கை
திருப்புவனம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கலெக்டர் ஆஷாஅஜீத்திடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
திருப்புவனம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் கடந்த 1964-ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது 948 உறுப்பினர்களிடம் இருந்து பால் கொள்முதல் செய்யப்படுகிறது. 3,500 லிட்டர் பால் வினியோகத்திற்கும், 5000 லிட்டர் பால் ஆவினுக்கும் வழங்கி வருகிறோம். சில ஆண்டுகளுக்கு முன் 900 லிட்டர் பால் உற்பத்தியில் இருந்து தற்போது 8,500 லிட்டருக்கும் மேல் பால் கொள்முதல் செய்யும் அளவிற்கு சங்கம் வளர்ச்சியடைந்துள்ளது.
இந்த முன்னேற்றத்திற்கு பணியாளர்களாகிய எங்களது கடின உழைப்புதான் காரணமாகும். மேலும் திருப்புவனம் பகுதியில் பால் உற்பத்தியை பெருக்கும் வகையில் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கல், அரசு சார்பில் பால் குளிரூட்டும் நிலையம் அமைத்தல் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து இச்சங்கம் மற்றும் இப்பகுதி பால் உற்பத்தியாளர்களின் வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் இச்சங்கம் குறித்து சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் விவசாயி ஒருவர் புகார் தெரிவித்தார். பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான பால் வழங்கல் பணியில் இரவு-பகல் பாராமல் உழைக்கும் எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. எனவே குறைதீர் கூட்டங்களில் இது போன்ற நபர்கள் எங்களது பால் கூட்டுறவு சங்கம் குறித்து அவதூறு பேசவிடாமல் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.