மின்வாரியத்துக்கு நிலக்கரி வாங்கிய விவகாரம்: ரூ.908 கோடி ஊழல் வழக்கை ரத்துசெய்ய முடியாது -ஐகோர்ட்டு


மின்வாரியத்துக்கு நிலக்கரி வாங்கிய விவகாரம்: ரூ.908 கோடி ஊழல் வழக்கை ரத்துசெய்ய முடியாது -ஐகோர்ட்டு
x

தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு நிலக்கரி வாங்கியதில் ரூ.908 கோடி ஊழல் நடந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசில், அறப்போர் இயக்கம் சார்பில் ஒரு புகார் கொடுக்கப்பட்டது.

அதில், "தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு, கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் நிலக்கரி கொண்டு வர செலவிட்டதில் ஆயிரத்து 28 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது.

மகாநதி நிலக்கரி சுரங்கம் மற்றும் ஈஸ்டர்ன் நிலக்கரி சுரங்கத்தில் இருந்து விசாகப்பட்டினம் துறைமுகம் வழியாக நிலக்கரி கொண்டுவந்த ஒப்பந்ததாரர் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் லிமிடெட், துறைமுகத்திற்கு வரியாக கட்டிய பணத்தின் உண்மையான ரசீதுகளை சமர்ப்பிக்கவில்லை. போலியானவற்றை சமர்ப்பித்து பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது.

அந்த நிறுவனத்துடன், மின்சார வாரிய நிர்வாகத்தினரும் கூட்டு சதியில் ஈடுபட்டு ஊழல் செய்துள்ளனர்" என்று கூறப்பட்டிருந்தது.

10 பேர் மீது வழக்கு

இந்த புகாரின்படி போலீசார் விரிவான விசாரணையை மேற்கொண்டதில் ரூ.908 கோடி ஊழல் நடந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அப்போதைய தலைமை பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், சவுத் இந்தியா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்று மொத்தம் 10 பேர் மீது கடந்த பிப்ரவரி மாதம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்ய கோரி, சென்னை ஐகோர்ட்டில், சவுத் இந்தியா கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

ரத்து கூடாது

இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நேற்று நடைபெற்றது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில், ரூ.908 கோடி அளவிற்கு முறைகேடு நடைபெற்றதிற்கான ஆதாரங்கள் உள்ளன. அதனால், வழக்கை ரத்து செய்யக்கூடாது என வாதிடப்பட்டது.

அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வக்கீல் சுரேஷ், "விசாகப்பட்டினம் துறைமுகத்தில் உரிய வரி கட்டாமலே மின்வாரியத்தில் அதற்கான தொகையை வாங்கப்பட்டுள்ளதாக மத்திய தணிக்கை துறை அறிக்கையில் இந்த இழப்பு குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டெண்டர் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. அதனால், இந்த வழக்கை ரத்து செய்யக்கூடாது" என்று வாதிட்டார்.

முடியாது

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "வழக்கை ரத்து செய்ய முடியாது" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Next Story