சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில் கடலோர காவல் படை போலீஸ்காரர் கைது
சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில் கடலோர காவல் படை போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
சிறுமி பலாத்காரம்
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கீரனூரை சேர்ந்த ரஞ்சித் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதனை தொடர்ந்து துரைராஜ், ஆனந்த் உள்ளிட்ட சிலர் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார்.
இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கீரனூர் அனைத்து மகளிர் போலீசார் ரஞ்சித், துரைராஜ், ஆனந்த் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைது
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடலோர காவல் படை போலீஸ்காரர் வடிவேல் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் வடிவேலை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட வடிவேலுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.