பொழியூரில் தொடரும் கடல்சீற்றம்: குமரி-கேரளாவை இணைக்கும் கடற்கரை சாலை துண்டிப்பு


பொழியூரில் தொடரும் கடல்சீற்றம்: குமரி-கேரளாவை இணைக்கும் கடற்கரை சாலை துண்டிப்பு
x
தினத்தந்தி 16 Jun 2023 12:15 AM IST (Updated: 16 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கொல்லங்கோடு அருகே பொழியூரில் கடல் சீற்றத்தால் குமரி-கேரளாவை இணைக்கும் கடற்கரை சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

கொல்லங்கோடு,

கொல்லங்கோடு அருகே பொழியூரில் கடல் சீற்றத்தால் குமரி-கேரளாவை இணைக்கும் கடற்கரை சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடரும் கடல் சீற்றம்

ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய மாதங்களில் ஆண்டுதோறும் குமரி மேற்கு கடற்கரை மற்றும் கேரள கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்படுவது வழக்கம். அவ்வாறு சீற்றத்தின்போது கரையை ஒட்டியுள்ள வீடுகள் பகுதியில் மணல் அரிப்பு ஏற்படும். அதன்பின்னர் அந்த வீடு கடலுக்குள் இழுத்து செல்லப்படும்.

இதை தடுக்க தமிழக மற்றும் கேரள அரசுகள் கடற்கரை கிராமங்களில் பெரிய அளவிலான பாறை கற்களை கொண்டு அலை தடுப்புச்சுவர் அமைத்து பாதுகாத்து வருகின்றனர்.

வீடுகள் இடிந்தன

இந்த நிலையில் தமிழக-கேரள எல்லை கடலோர கிராமமான பொழியூர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. ராட்சத அலைகள் எழுந்து கரையை நோக்கி வந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள அலை தடுப்புச்சுவரில் ஆக்ேராஷத்துடன் மோதி சிதறுகிறது. இதனால், அலை தடுப்புச்சுவர் கற்கள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன.

மேலும், கரையோரம் உள்ள வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தன. இதனால் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. கடல்நீர் புகுந்ததால் வீடுகளுக்குள் மணல் திட்டுகளாக காணப்படுகின்றன. இதையடுத்து வீடுகளை இழந்து பாதித்த மக்கள் உறவினர்கள் வீடுகளிலும், கேரள அரசு அமைத்துள்ள முகாம்களிலும் தஞ்சமடைந்துள்ளனர்.

சாலை துண்டிப்பு

இதற்கிடையே கடல் சீற்றத்தால் ஏற்பட்ட ராட்சத அலைகளால் அந்த பகுதியில் உள்ள குமரி-கேரளாவை இணைக்கும் நீரோடி-பொழியூர் கடற்கரை சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதன்காரணமாக குமரி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் கேரளாவுக்கும், கேரள மீனவர்கள் குமரி மாவட்டத்திற்கும் வந்து செல்ல முடியாத வகையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், மீனவ கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தொடர்ந்து ஏற்படும் கடல் சீற்றத்தில் இருந்து மீதம் இருக்கும் சாலையை பாதுகாக்க அந்த பகுதி மீனவர்கள் மணல் மூடைகளை கரைகளில் அடுக்கி வைத்து தடுப்புகள் அமைத்துள்ளனர். ஆனாலும், சூறைக்காற்றுடன் ராட்சத அலைகள் 6 அடி உயரத்திற்கு எழுந்து வருவதால், தொடர்ந்து மண் அரிப்பு ஏற்பட்டு சாலை முழுவதும் கடலுக்குள் இழுத்துச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன விபத்துகள் ஏற்படாமல் இருக்க மீனவர்கள் சாலையின் எல்லை பகுதிகளில் கயிறு கட்டி தடுப்புகள் அமைத்து உள்ளனர்.

மின்கம்பங்கள் சாய்ந்தன

மேலும் கடல் சீற்றத்தின் காரணமாக சூறைக்காற்று வீசியதால் பொழியூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஏராளமான மின்கம்பங்கள் சரிந்து விழுந்து சேதமடைந்துள்ளன.

இதன்காரணமாக அந்த பகுதியில் கடந்த 3 நாட்களாக மின் வினியோகம் தடைப்பட்டிருந்தது. இதுபற்றி தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் வந்து மின் கம்பங்களை சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீனவ மக்கள் கோரிக்கை

தற்போது பொழியூர் பகுதியில் உள்ள சாலை துண்டிக்கப்பட்டதை போன்று கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கடல் சீற்றத்தில் குமரி மாவட்ட மீனவ கிராமங்களை இணைக்கும் எடப்பாடு சாலை துண்டிக்கப்பட்டது. அந்த சாலை இதுவரை சீரமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதே போன்று தற்போது துண்டிக்கப்பட்டுள்ள சாலையும் கேரள அரசு கண்டுகொள்ளாமல் இருந்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் மீனவ கிராம மக்கள் உள்ளனர்.

எனவே, கேரள அரசு துண்டிக்கப்பட்டுள்ள பொழியூர் சாலையை சீரமைக்க வேண்டும் என மீனவ கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story