அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு வெள்ளை அங்கி வழங்கல்
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு வெள்ளை அங்கி வழங்கப்பட்டது.
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் நேற்று முதலாம் ஆண்டு மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு வெள்ளை அங்கி வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கி வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், வெள்ளை அங்கி உடுத்தும் பழக்கம் நாங்கள் பயிலும் காலத்தில் இல்லை. தற்போது தான் வெள்ளை அங்கி அணியப்பட்டு வருகிறது. வெள்ளை அங்கியை உடுத்துவதனால் நாம் பெருமை கொள்ள வேண்டும், என்றார். தொடர்ந்து முதலாம் ஆண்டு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கலெக்டர் தலைமையில் மருத்துவர்களின் கடமைகள் மற்றும் நன்னடத்தை அமைக்கும் உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர். இதில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் தாமோதரன், துணை முதல்வர் நளினி, மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா, நிலைய மருத்துவ அலுவலர் குமார், கல்வி அலுவலர் நந்தகுமார் மற்றும் பேராசிரியர்கள், துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.