பழங்கால சூலக்கல் கண்டுபிடிப்பு
பழங்கால சூலக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது
திருப்புவனம்
திருப்பாச்சேத்தியில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் கிழக்கு நோக்கிய நிலையில் சூலத்தை புடைப்பு சிற்பமாக உடைய சூலக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இக்கிராமத்தை சேர்ந்த சோனைமுத்து, அய்யப்பன், செந்தில்வேல் ஆகியோர் கூறியதாவது:- முந்தைய காலத்தில் கோவிலுக்கு தானமாக எவ்வித வரியும் இல்லாமல் நித்திய பூஜைகள் தொடர்ந்து நடைபெற மன்னர்களால் சிவன் கோவிலுக்கு வழங்கப்படும் நிலம் தேவதானம் எனப்படும். அதேபோல் பெருமாள் கோவிலுக்கு மானியமாக விடப்படும் நிலம் திருவிளையாட்டம் எனப்படும். இங்கு தெரியவந்த சூலக்கல் மிகப் பழமை வாய்ந்ததாக காணப்படுகிறது. ஆகையால் இது பாண்டிய மன்னர்களால் தானமாக வழங்கப்பட்டிருக்கலாம் எனவும், சிவன், காளி, அய்யனார் கோவிலுக்கு அளிக்கப்படும் நிலத்தில் சூலமும், பெருமாள் கோவிலுக்கு அளிக்கப்படும் நிலத்தில் சக்கரமும், பவுத்த கோவிலுக்கு அளிக்கப்படும் நிலங்களில் தர்ம சக்கரமும், ஜைன மதத்தினருக்கு வழங்கப்படும் நிலங்களில் நடப்படும் கல்லில் மும்மணிகளும் பொறிக்கப்பட்டிருக்கும்.
இந்த சூலக்கல்லானது சுமார் 1½ அடி உயரமும், சுமார் 1½ அடி அகலமும் உடையது. இதில் எழுத்துக்கள் ஏதும் காணப்படவில்லை. இந்த சூலக்கல் இப்பகுதியில் கிடைக்கப்பெற்ற பழங்கால சூலக்கல்லாகும். இக்கல்லை கிராம மக்கள் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர் எனவும் கூறினா்.