வீடுதோறும் தென்னங்கன்றுகள் வினியோகம்
வீடுதோறும் தென்னங்கன்றுகள் வினியோகம்
போடிப்பட்டி
மடத்துக்குளத்தையடுத்த மெட்ராத்தி ஊராட்சியில் வீடுதோறும் தென்னங்கன்றுகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இலவச தென்னங்கன்றுகள்
ஒவ்வொரு வீட்டிலும் 2 தென்னை மரங்கள் நின்ற காலம் மாறி, தற்போது பெரும்பாலான வீடுகளில் தென்னை மரங்கள் வெட்டப்பட்டு விட்டன.வீட்டுக்கு ஒரு மரம் அல்ல...2 மரங்கள் வளர்ப்போம் என்பதை ஊக்குவிக்கும் வகையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் வீடு தோறும் தென்னங்கன்றுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 2 தென்னங்கன்றுகள் வேளாண்மைத்துறையின் மூலம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
600 கன்றுகள்
அந்த வகையில் மடத்துக்குளம் வட்டாரம் மெட்ராத்தி ஊராட்சியில் 2023-24 ஆம் ஆண்டின் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மொத்தம் உள்ள 300 குடும்பங்களுக்கு தலா 2 கன்றுகள் வீதம் 600 தென்னங்கன்றுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியை மெட்ராத்தி ஊராட்சி மன்றத் தலைவர் தங்கராஜ் மற்றும் மடத்துக்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தேவி ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மடத்துக்குளம் துணை வேளாண்மை அலுவலர் பிரகாஷ், பொறுப்பு அலுவலர் பாலு மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் சுனிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பயனாளிகள் உரிய ஆவணங்களுடன் வந்து தென்னங்கன்றுகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். மேலும் தென்னங்கன்றுகளை வீட்டில் நடவு செய்து முறையாக பராமரிக்க வேளாண்மைத் துறை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டது.