அனைத்து ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும்


அனைத்து ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும்
x

அனைத்து ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கும் தீர்மானத்தை கிராம சபைகளில் நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்

அனைத்து ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கும் தீர்மானத்தை கிராம சபைகளில் நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விலை இல்லை

விவசாயத்தின் உயிர் நாடியாக தென்னை சாகுபடி உள்ளது. ஆனால் சமீப காலங்களாக தென்னை விவசாயம் என்பது லாபகரமானதாக இல்லாததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். தேங்காய், கொப்பரை, ஓலை, மட்டை என தென்னை சார்ந்த பொருட்கள் எதற்குமே விலை இல்லாத நிலையே உள்ளது.

எனவே பொதுமக்கள் மத்தியில் தேங்காய் எண்ணெய் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையிலும் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

ரேஷன் கடையில் தேங்காய் எண்ணெய்

நமது முன்னோர்களின் தினசரி பயன்பாட்டில் தேங்காய் எண்ணெய் முக்கிய இடம் பிடித்துள்ளது. இடைப்பட்ட காலங்களில் தேங்காய் எண்ணெயில் கொழுப்புச்சத்து அதிகம் உள்ளதாக விஷம பிரசாரம் செய்யப்பட்டது. இதனை உண்மையென்று நம்பிய பொதுமக்கள் சூரியகாந்தி எண்ணெய் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் எண்ணெய்க்கு மாறிவிட்டனர். இது தவிர விலை குறைவு என்ற ஒரே காரணத்துக்காக விற்பனை சார்ந்த உணவுப்பண்டங்களை தயாரிப்பவர்கள் பாமாயில் பயன்படுத்தி வருகின்றனர்.

இதுதவிர ரேஷன் கடைகளிலும் அரசு மானிய விலையில் பாமாயில் வழங்கி வருகிறது. இதற்கென மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிக அளவில் பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும் பாமாயில் இறக்குமதியை குறைக்கும் வகையில் எண்ணெய்ப்பனை சாகுபடியை ஊக்குவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தீர்மானம்

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் தேங்காய் உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில், கையில் வெண்ணெய் இருக்கும்போது ஏன் நெய்க்கு அலைய வேண்டும். எனவே அரசு விவசாயிகளிடமிருந்து நேரடியாக தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டும். கொப்பரை உற்பத்தி, தேங்காய் எண்ணெய் உற்பத்தி போன்றவற்றை 100 நாள் வேலைத்திட்டப் பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் அரசே மேற்கொள்ளலாம்.

இதன் மூலம் கிராமப்புற வேலை வாய்ப்புகளை அதிகரிக்கலாம். அவ்வாறு உற்பத்தி செய்யும் தேங்காய் எண்ணெயை மானிய விலையில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகிக்க வேண்டும். இதன் மூலம் தேங்காய்க்கு சீரான விலை கிடைக்கும். இந்த திட்டத்தை செயல்படுத்த அனைத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒருங்கிணைந்து வரும் 15-ந்தேதி நடைபெறவுள்ள கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றி அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.


Related Tags :
Next Story