தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றுதிருமூர்த்தி நகரில் உள்ள தென்னை வளர்ச்சி வாரியத்தில் நடந்த உலக தென்னை தின விழாவில் வலியுறுத்தப்பட்டது.
தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றுதிருமூர்த்தி நகரில் உள்ள தென்னை வளர்ச்சி வாரியத்தில் நடந்த உலக தென்னை தின விழாவில் வலியுறுத்தப்பட்டது.
தென்னை தின விழா
மங்கள நிகழ்வுகளின் அடையாளம், இறை வழிபாட்டில் முதலிடம், விவசாய குடும்பத்தின் முதல் பிள்ளை, அடி முதல் நுனி வரை பயன் மற்றும் ஆற்றல் தரும் பொருட்களை அளித்து நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏராளமான குடும்பத்தை காலம் காலமாக வாழ வைத்துக்கொண்டிருக்கும் தென்னை மரத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 2-ந் தேதியன்று உலக தென்னை தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி உடுமலையை அடுத்த தளி பேரூராட்சிக்குட்பட்ட திருமூர்த்தி நகரில் உள்ள தென்னை வளர்ச்சி வாரியம், தென்னைமகத்துவ மையம், செயல் விளக்க மற்றும் விதை உற்பத்தி பண்ணையில் 15-வது உலக தென்னை தினவிழாவை முன்னிட்டு தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறைக்கான தென்னைத் துறையை நிலைநிறுத்துதல் என்ற கருப்பொருளை முன்னிலைப்படுத்தி திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பொதுமக்களிடம் விழிப்புணர்வு
தென்னை வளர்ச்சி வாரிய மேலாளர் கு.ரகோத்துமன் வரவேற்றார். தமிழகம் முழுவதும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தளி பண்ணையில் தொடக்கம் முதலே மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து வலியுறுத்தி பேசியதுடன் தென்னை வளர்ச்சி வாரியத்தில் இருந்து செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் நோக்கங்கள் மற்றும் நன்மைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
பொள்ளாச்சி தொகுதி கு.சண்முகசுந்தரம் எம்.பி. தொடக்கவுரையாற்றினார். இளநீர், தேங்காய் எண்ணெய், தூய தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் ஆரோக்கியத்தை பராமரிக்க தேங்காய் எண்ணெய், நீரா மற்றும் தென்னை சர்க்கரை பொதுமக்கள் உபயோகப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
வினாடி-வினா போட்டி
வெள்ளை ஈயினை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, ஒட்டுண்ணிகள் வெளியீடு குறித்த தொழில்நுட்பம், மரம் ஏறும் கருவி மூலம் தென்னை மரம் ஏறுதல் மற்றும் ஹைட்ராலிக் மூலம் தேங்காய் அறுவடை மற்றும் தெளிப்பான் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது. உலக தென்னை தினத்தை முன்னிட்டு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு எம்.பி.பரிசுகளை வழங்கினார்.
இதில் உடுமலை ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கோவை இணைப்பு பேராசிரியர் டாக்டர் கே.ராஜமாணிக்கம் உள்ளிட்ட மாநில மற்றும் மத்திய அரசின் துறை சார்ந்த வல்லுனர்கள் கலந்து கொண்டனர்.