தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வேண்டும்


தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வேண்டும்
x
தினத்தந்தி 18 Jun 2023 7:30 PM GMT (Updated: 18 Jun 2023 7:30 PM GMT)

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வேண்டும் என்று புதிய ஆயக்கட்டு பாசன சங்க விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோயம்புத்தூர்

ஆனைமலை

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வேண்டும் என்று புதிய ஆயக்கட்டு பாசன சங்க விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சங்க ஆண்டு விழா

ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் நல சங்கத்தின் ஆண்டு விழா, தென்சங்கம்பாளையத்தில் உள்ள தனியார் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயகுமார் தலைமை தாங்கினார். ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன சங்க தலைவர் அசோக் குமார் வரவேற்றார். செயலாளர் செந்தில் மற்றும் தென்னை ஆராய்ச்சி நிலைய அதிகாரி சுதா லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில திட்டக்குழு உறுப்பினர் ஜெயரஞ்சன் கலந்துகொண்டு பேசினார்.

விழாவில், ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல அறிவித்த திட்டத்தை பி.ஏ.பி. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாற்றி அமைத்து கொடுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

தீர்மானங்கள்

மேலும் பொள்ளாச்சி, சேத்துமடை, ஆழியாறு கூட்டு கால்வாய்களை சீரமைக்க போதிய நிதி ஒதுக்குவது, வேட்டைக்காரன் புதூர் கால்வாய் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிப்பது, ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக கேரள அரசுடன் விரைவாக பேச்சுவார்த்தை நடத்துவது, அந்த திட்டத்தை நிறைவேற்றும்போது நல்லாறு மூலம் பயன் பெற்று வந்த பாலாற்றங்கரை கிராம மக்களுக்கு வழக்கம்போல் குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கு தண்ணீர் வழங்குவதை உறுதி செய்வது, கொப்பரை தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்வது, பாமாயில் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியை தடை செய்வது, ரேஷன் கடையில் தேங்காய் எண்ணெய் வினியோகிப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் சங்க பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.


Next Story