தேங்காய் எண்ணெய்யை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும்
தேங்காய் எண்ணெய்யை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என்று பொள்ளாச்சியில் அண்ணாமலை வலியுறுத்தினார்.
பொள்ளாச்சி
தேங்காய் எண்ணெய்யை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என்று பொள்ளாச்சியில் அண்ணாமலை வலியுறுத்தினார்.
உற்சாக வரவேற்பு
வால்பாறை தொகுதியில் என் மண் என் மக்கள் பாத யாத்திரையை முடித்துக்கொண்டு, ஆனைமலையில் இருந்து பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பொள்ளாச்சிக்கு இரவு 7.30 மணிக்கு வந்தார்.
மார்க்கெட் ரோட்டில் இருந்து அவர் பாத யாத்திரையை தொடங்குவதாக இருந்தது. ஆனால் அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் வாகனத்தில் ஏறி திருவள்ளுவர் திடல் கடைவீதி, காந்தி சிலை வழியாக பஸ் நிலையத்திற்கு வந்து அடைந்தார். முன்னதாக வரும் வழியில் அவருக்கு பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பஸ் நிலையத்தில் முன் வாகனத்தில் நின்றபடி அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நடக்க முடியவில்லை
62 தொகுதிகளில் யாத்திரையை முடித்துள்ளேன். 63-வது தொகுதியான பொள்ளாச்சியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் என்னால் 100 மீட்டர் தூரம் கூட நடக்க முடியவில்லை. தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எழுச்சி உணர்வோடு இங்கே பொதுமக்கள் திரண்டு வந்திருக்கிறார்கள்.
இந்தியாவில் ஊழல் ஆட்சியை ஒழித்து, கடந்த 9 ஆண்டுகளில் மோடி படிப்படியாக வளர்ச்சி அடைய செய்து உள்ளார். உலக பொருளாதாரத்தில் 5-ம் இடத்தில் இருக்கும் இந்தியாவை 2028-ம் ஆண்டு 3-வது இடத்திற்கு கொண்டு வருவேன் என்று சபதம் எடுத்து உள்ளார்.
பொள்ளாச்சியில் இருந்து ஆண்டுக்கு ரூ.2000 கோடிக்கு தென்னை நார் ஏற்றுமதி செய்துள்ளனர். அதற்கு மோடியின் அளித்த ஊக்கம், நேர்மை, தன்னம்பிக்கை, முயற்சி தான் சாத்தியப்படுத்தி உள்ளது. மத்திய அரசு திண்டுக்கலில் இருந்து பொள்ளாச்சி வரை ரூ.4 ஆயிரம் கோடிக்கு 4 வழிச்சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது .இந்த பணிகள் 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் முடிந்து பயன்பாட்டிற்கு வரும்.
நீட் தேர்வு
மத்தியில் தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போது தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. ஆனால் அவர்களை நீட் தேர்வு எதிர்க்கின்றனர். பிரச்சினைகளை கிளப்பி மக்களை ஏமாற்றுவது தான் தி.மு.க.வின் வேலை.
தேங்காய், கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. கொப்பரை தேங்காய்க்கு மத்திய அரசு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்துள்ளது ஆனால் அந்த பலன் விவசாயிகளுக்கு போய் சேரவில்லை. இடைத்தரர்களை தி.மு.க. அரசு ஊக்குவிக்கிறது. உரித்த தேங்காயை கிலோவுக்கு ரூ.29 கொடுக்க மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது அந்த பணம் எங்கே செல்கிறது என்பது தெரியவில்லை.
ரேஷன் கடைகளில் மானிய விலையில் தேங்காய் எண்ணெய்யை விற்பனை செய்ய தமிழக அரசு முன்வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் மாவட்ட தலைவர் வசந்திராஜன், மாவட்ட பொதுசெயலாளர் வக்கீல்துரை, நகர தலைவர் பரமகுரு, நகர பார்வையாளர் டாக்டர் ஜெயமுருகன், நகர பொதுச்்செயலாளர்கள் டாக்டர் ராஜ்மோகன், நித்தீன் தங்கவேல், நகர பொருளாளர் சிவபிரகாஷ், மேம்பாட்டு பிரிவு தலைவர் கோகுல்குமார், முன்னாள் மாவட்ட தலைவரும், தென்னை வளர்ச்சி வாரிய உறுப்பினருமான எஸ்.வி.முத்துராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.