பொள்ளாச்சி அருகே விவசாயிகளுக்கு தென்னை தொழில்நுட்ப பயிற்சி
பொள்ளாச்சி அருகே விவசாயிகளுக்கு தென்னை தொழில்நுட்ப பயிற்சி
பொள்ளாச்சி
உலக தென்னை தினத்தை முன்னிட்டு, உயர் விளைச்சலுக்கான தென்னை சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்த பயிற்சி மற்றும் இடுபொருட்கள் வழங்கும் விழா நடந்தது. அதன்படி பொள்ளாச்சி வடக்கு சி.கோபாலபுரம் மற்றும் சி.அர்த்தநாரிபாளையம் ஆகிய இரு கிராமங்களில் பழங்குடி இன விவசாயிகளுக்கு நடத்தப்பட்டது.
தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். அப்போது அவர், ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் விவசாயிகளுக்கு செய்து வரும் சேவைகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி பேசினார். உழவியல் பேராசிரியர் தவப்பிரகாஷ், பயிர் நோயியல் இணை பேராசிரியர் லதா ஆகியோர் பேசினர். தென்னையைத் தாக்கும் பூச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை பூச்சியியல் துறை இணை பேராசிரியர் அருள் பிரகாஷ் தெரிவித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தென்னை ஆராய்ச்சி நிலைய மண்ணியல் துறை இணை பேராசிரியர் சுதாலட்சுமி செய்திருந்தார்.
முன்னதாக, விழாவில் திட்டப் பயனாளிகளுக்கு நெட்டை தென்னங்கன்றுகள், மண்புழு உரம் வழங்கப்பட்டது. இதில், தென்னை ஆராய்ச்சி நிலைய வேளாண் மேற்பார்வையாளர் சரவணக்குமார், ஆய்வக தொழில் நுட்ப வல்லுநர்கள் பஞ்சலிங்கம், கிர்பா ஆகியோர் செயல்முறை விளக்கங்களை செய்து காண்பித்தனர். விழாவில் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.