கோவை தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை


கோவை தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை
x
தினத்தந்தி 9 Jun 2023 4:15 AM IST (Updated: 9 Jun 2023 4:15 AM IST)
t-max-icont-min-icon

உணவு பாதுகாப்பில் சிறந்து விளங்கியதற்காக கோவை தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து உள்ளது.

கோயம்புத்தூர்

கோவை

உணவு பாதுகாப்பில் சிறந்து விளங்கியதற்காக கோவை தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து உள்ளது.

உணவு பாதுகாப்பு

உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் சார்பில் புதுடில்லியில் நடந்த விழாவில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தின் 5-வது மாநில உணவு பாதுகாப்பு குறியீடு 2022-2023-ம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், தேசிய அளவில் கேரள மாநிலம் முதலிடமும், பஞ்சாப் மாநிலம் 2-வது இடத்தையும், தமிழ்நாடு 3-வது இடத்தையும் பெற்றது. தமிழ்நாட்டிற்கான விருதினை மாநில உணவு பாதுகாப்பு துறை கமிஷனர், மத்திய சுகாதாரம், குடும்பநலம், ரசாயன மற்றும் உரங்கள் துறை மந்திரி மான்சுக் மண்டேவியா வழங்கினார்.

மேலும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் சார்பில் "ஈட் ரைட் சேலஞ்ச் பேஸ்-2" என்ற போட்டி தேசிய அளவில் மாவட்டங்களுக்கு இடையே கடந்த ஆண்டு மே முதல் நவம்பர் வரை நடத்தப்பட்டது. இப்போட்டியில் தேசிய அளவில் 231 மாவட்டங்கள் பதிவு செய்து கலந்து கொண்டன. போட்டியானது பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்தல், சரியான மற்றும் பாதுகாப்பான உணவு பழக்கவழக்கங்களை பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன் நடைபெற்றது.

தேசிய அளவில் கோவை முதலிடம்

அத்துடன் இந்த போட்டியில் உணவு வணிக நிறுவனங்களின் உரிமம் பெறுதல், தொடர் கண்காணிப்பு, உணவு மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்தல், விதிமுறைகள் பின்பற்றுதல், உணவு வணிக நிறுவனங்கள் வருடாந்திர கொள்முதல் இணையத்தில் தாக்கல் செய்தல், இணைய வழியாக வரும் புகார்களை உடனுக்குடன் ஆய்வு செய்தல், உணவு வணிகர்களுக்கான பயிற்சி வழங்குதல், பொது இடங்களில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சமூக வலைதளங்களில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, சிறு தானிய உணவுகள் தொடர்பான விளக்கம். மற்றும் செறிவூட்டப்பட்ட உணவுகள் குறித்த விளக்கங்கள் என பல்வேறு குறியீடுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் தீர்மானிக்கப்பட்டது.

இதில் சிறந்து விளங்கும் மாவட்டங்களுக்கு தேசிய அளவில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி கோவை மாவட்டம் 200 மதிப்பெண்களுக்கு 196 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து உள்ளது. இதையொட்டி உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் சார்பில் புதுடெல்லியில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கலந்துகொண்டு தேசிய அளவில் முதலிடம் பிடித்த கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி டாக்டர் தமிழ்ச்செல்வனை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த கோவை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வனை கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.



Next Story