கோவை கார் வெடிப்பு சம்பவம் : சென்னையில் வழிபாட்டுத் தலங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு - காவல் ஆணையர் உத்தரவு
மக்கள் கூடும் முக்கிய இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்கவும், தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
கோவை,
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக இன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். சத்தம் கேட்ட பொது மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கும் ,காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். முதல்கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறி இருப்பது தெரியவந்தது.காரின் பதிவு எண் பொள்ளாச்சி முகவரியில் இருப்பதால் , அந்த முகவரி குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதிக்கு செல்லும் பாதைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும், மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு விசாரணையானது நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் சம்பவ இடத்தில் சந்தேகத்திற்கு இடமாக கிடந்த ஆணிகள், கோலி குண்டுகள், பால்ராஸ் குண்டுகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் கோவை விரைந்த டிஜிபி சைலேந்திர பாபு சம்பவ இடத்தில ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிலையில் இந்த சம்பவத்தை தொடர்ந்து ,சென்னையில் முக்கிய வழிபாட்டுத் தலங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் தீவிரமாக கண்காணிக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் கூடும் முக்கிய இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்கவும், தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.