கோவை மத்திய சிறைச்சாலை காரமடைக்குமாறுகிறது
கோவை மத்திய சிறைச்சாலை காரமடைக்கு மாறுகிறது. இது தொடர்பாக உள்துறை செயலாளர் அமுதா ஆய்வு செய்தார்.
கோவை மத்திய சிறைச்சாலை காரமடைக்கு மாறுகிறது. இது தொடர்பாக உள்துறை செயலாளர் அமுதா ஆய்வு செய்தார்.
செம்மொழி பூங்கா
கோவை மத்திய சிறைச்சாலை கடந்த 1872-ம் ஆண்டு கட்டப்பட்டது. இதை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்து விட்டு, அங்கு சர்வதேச தரத்திலான பூங்கா அமைக்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சராக கருணாநிதி இருந்த போது அறிவிக்கப்பட்டது.
இதற்கான அரசாணை கடந்த 2010-ம் ஆண்டு வெளியிடப் பட்டது. அதன்பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை சிறைச்சாலை மைதானத்தில் காலியாக உள்ள இடத்தில் ரூ.172 கோடியில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, டெண்டர் விடப்பட்டது.
இடமாற்றம்
இதையடுத்து கோவை மத்திய சிறைச்சாலையை காரமடை அருகே பிளிச்சி பகுதிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்காக அங்கு நிலம் தேர்வு செய்யப்பட்டது.
கோவை சிறைச்சாலை யை இடமாற்றம் செய்வது தொடர்பாக ஆய்வு செய்ய உள்துறை செயலாளர் அமுதா நேற்று கோவை வந்தார்.
அவர் புதிதாக சிறைச் சாலை கட்ட தேர்வு செய்யப்பட்ட பிளிச்சி பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் கோவை சிறைச் சாலையை நேரில் பார்வையிட்டார்.
அப்போது அவர், கோவை மத்திய சிறையில் உள்ள பாதுகாப்பு வசதிகள், தண்டனை மற்றும் விசாரணை கைதிகளுக்கு வழங்கப் படும் வேலைகள், அவர்களை சீர்திருத்துவதற்கான பயிற்சிகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
புத்தகங்கள் வழங்கினார்
இதைத்தொடர்ந்து சிறை நூலகத்திற்கு உள்துறை செயலாளர் அமுதா புத்தகங்கள் வழங்கினார். அவற்றை சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம், சூப்பிரண்டு ஊர்மிளா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
அப்போது கோவை கலெக்டர் கிராந்திகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் மற்றும் அதிகாரிகள், என்ஜினீயர்கள் உடன் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் கிராந்திகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவை மத்திய சிறைக்கு சொந்தமான இடத்தில் செம்மொழி பூங்கா அமைய உள்ளது. எனவே காரமடை பிளிச்சி பகுதியில் புதிய சிறை அமைப்பது தொடர்பாக உள்துறை செயலாளர் அமுதா ஆய்வு மேற்கொண்டார்.
எதிர்காலத்திற்கு தேவையான அனைத்து வித வசதிகளையும் கொண்டதாக புதிய சிறைச் சாலையை கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.
கோவையில் மத்தியசிறை கைதிகளுக்கு பல்வேறு பயிற்சிகள் சிறப்பாக அளிக்கப்பட்டு வருகிறது. தெலுங்கானாவில் தற்போது கட்டப்பட்டுள்ள சிறையையும் ஆய்வு செய்து, அனைத்து வசதிக ளையும் கொண்ட மார்டன் சிறைச்சாலை கட்ட ஆலோசனை மற்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பிளிச்சியில் சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் அரசு நிலம் உள்ளது. அதில் சிறைச்சாலை கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.
அந்த பணி நிறைவடையும் போது தான் கூடுதல் நிலம் தேவைப்படுமா என்பது தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.