கோவை மாவட்டத்தில் ரூ.185 கோடிக்கு கொப்பரை தேங்காய் கொள்முதல்


கோவை மாவட்டத்தில் ரூ.185 கோடிக்கு கொப்பரை தேங்காய் கொள்முதல்
x
தினத்தந்தி 3 Nov 2022 12:15 AM IST (Updated: 3 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் ரூ.185 கோடிக்கு கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்து உள்ளதாக கோவை விற்பனை குழு அதிகாரி தெரிவித்தார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

கோவை மாவட்டத்தில் ரூ.185 கோடிக்கு கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்து உள்ளதாக கோவை விற்பனை குழு அதிகாரி தெரிவித்தார்.

கொப்பரை தேங்காய் கொள்முதல்

கடந்த ஆண்டு பெய்த பருவமழைகளின் காரணமாக தேங்காய் விளைச்சல் அதிகரித்ததால், விலை வீழ்ச்சி அடைந்தது. மேலும் வெளிமார்க்கெட்டில் கொப்பரை தேங்காய் விலை குறைந்தது. இதன் காரணமாக விவசாயிகளிடம் இருந்து அரசு கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, செஞ்சேரிமலை உள்பட பல்வேறு பகுதிகளில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டன.

கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.105.90-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. இதற்கிடையில் கடந்த ஜூலை மாதம் 31-ந்தேதியுடன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்வதற்கான காலம் முடிந்தது. இதனால் வெளிமார்க்கெட்டில் கொப்பரை தேங்காய் விலை குறைந்ததால் மத்திய அரசு கொப்பரை தேங்காய் கொள்முதல் தேதியை நீட்டித்து உத்தரவிட்டது. அதன்படி கடந்த 31-ந்தேதி வரை கொப்பரை தேங்காய் கொள்முதல் காலம் நிறைவடைந்தது. இதுகுறித்து கோவை விற்பனை குழு முதுநிலை செயலாளர் சாவித்திரி கூறியதாவது:-

18 ஆயிரம் மெட்ரிக் டன்

தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் விலை ஆதார திட்டத்தின் கீழ் கோவை வேளாண் விற்பனை குழு பொள்ளாச்சி, நெகமம், செஞ்சேரிமலை, அன்னூர், ஆனைமலை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் கிலோ ரூ.105.90-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

இதுவரைக்கும் சுமார் 18 ஆயிரம் விவசாயிகளிடம் இருந்து கிட்டதட்ட 18 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி விவசாயிகளிடம் இருந்து ரூ.185 கோடிக்கு கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டது. இதில் இன்னும் ரூ.32 கோடி விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய உள்ளது. ஒரு வார காலத்திற்குள் அனைத்து விவசாயிகளுக்கும் கொள்முதல் செய்தற்கான பணம் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story