கோவை மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் உள்பட 5 பேர் கைது


கோவை மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் உள்பட 5 பேர் கைது
x

கோவை மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் உள்பட 5 பேர் கைது

கோயம்புத்தூர்

போத்தனூர்

தி.மு.க. பிரமுகரை தாக்கிய சம்பவத்தில் கோவை மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் விரைந்து நடவடிக்கை எடுக்காத சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தி.மு.க. நிர்வாகி மீது தாக்குதல்

கோவையை அடுத்த கோவைப்புதூர் அருகே உள்ள அலமு நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 44) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தி.மு.க. பிரமுகர் ஆவார். இவர் மரகதம் நகரில் உள்ள மாநகராட்சி பேட்மிட்டன் கிளப்பில் உறுப்பினராக உள்ளார். இந்த கிளப்பில் சேருவதற்கு உறுப்பினர் கட்டணமாக ரூ.1000 மற்றும் மாத கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். இந்தநிலையில் கோவை மாநகராட்சி 90-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் ரமேஷ் (43) மற்றும் மார்ட்டின், ஜான்சன் (31), அபுதாகீர் (37), சாத்ராக் ஆகியோர் உறுப்பினர் கட்டணம் செலுத்தாமல் மாத கட்டணம் மட்டும் செலுத்தி பயிற்சி பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 2-ந் தேதி இதுகுறித்து கார்த்திகேயன் கவுன்சிலர் ரமேஷ் உள்பட 5 பேரிடம் கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இந்த தாக்குதலில் கார்த்தியேன் காயம் அடைந்தார். அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து குனியமுத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீசார் யாரும் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தவில்லை என்று கூறப்படுகிறது.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

நேற்று முன்தினம் காலையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் என்பவர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அவர் கார்த்திகேயனிடம் விசாரணை நடத்தி விவரங்களை கேட்டு எழுதி கொண்டார். அதன் பிறகே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.

இந்த சம்பவத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் சம்பந்தப்பட்ட நிலையில் உரிய நேரத்தில் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்காதது ஏன் என விசாரிக்கப்பட்டது. பின்னர் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், உயர் அதிகாரிகளுக்கு காலதாமதமாக தகவல் அளித்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமாரை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து உத்தரவிட்டார்.

அ.தி.மு.க. கவுன்சிலர் உள்பட 5 பேர் கைது

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து சப்- இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் விசாரணை நடத்தி தி.மு.க. பிரமுகரை தாக்கிய அ.தி.மு.க. கவுன்சிலர் ரமேஷ் உள்பட ஜான்சன், அபுதாகீர், சாத்ராக் 4 பேர் மீது காயம் ஏற்படுத்துதல், தகாத வார்த்தைகளால் பேசுதல், சட்டவிரோதமாக கூடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். விசாரணை முடிந்ததும் போலீஸ் நிலைய காவலில் 4 பேரையும் போலீசார் விடுதலை செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த மார்ட்டின் என்பவரையும் நேற்று போலீசார் கைது செய்து போலீஸ் நிலைய காவலில் விடுவித்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, கார்த்திகேயன் மற்றும் ரமேஷ் ஆகியோர் 10 ஆண்டுக்கும் மேலாக நண்பர்களாக இருந்து வந்தனர். இவர்கள் மற்றும் 20 பேர் கொண்ட நண்பர்கள் சேர்ந்து மாநகராட்சி இடத்தில் பேட்மிட்டன் விளையாட்டு அரங்கு அமைத்து உள்ளனர். இதற்கு பராமரிப்பு தொகையாக மாதம் தோறும் ரூ.500 நிர்வாகிகள் சார்பில் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பராமரிப்பு தொகை வழங்காததால் ரமேஷிடம் கார்த்திகேயன் பணத்தை கேட்டுள்ளார்.அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து கார்த்திகேயன் அளித்த புகாரின் அடிப்படையில் ரமேஷ் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலைய காவலில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றனர்.


1 More update

Next Story